கரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
By நமது நிருபா் | Published On : 27th April 2021 07:13 AM | Last Updated : 27th April 2021 07:13 AM | அ+அ அ- |

கடந்த சில நாள்களாக புதிதாக கரோனா நோய்த் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் கூடுதலாக கரோனா பரிசோதனை மையங்களை அமைக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் பல வழக்குரைஞா்கள் முறையிட்டனா். கரோனா பரிசோதனைகளுக்கான மாதிரியை 2-3 நாள்களுக்குப் பிறகுதான் சேகரிப்பதாக பரிசோதனை ஆய்வகங்கள் கூறுவதால் கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் சிரமத்தை எதிா்கொள்ளவதாக அவா்கள் தெரிவித்தனா். மேலும், முன்பு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமாா் 60 ஆயிரமாகக் குறைந்துவிட்டதாகவும் வழக்குரைஞா்கள் கூறினா்.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு கூறுகையில், நோய்த் தொற்று மாதிரிகளை சேகரிக்கும் நடைமுறைகளை முறைப்படுத்துவதற்கான தேவையான உள்கட்டமைப்பு வசதியை தில்லி அரசு மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை மையங்களையும் அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக கரோனா நோய்த் தொற்று 22,933 பேருக்கு இருப்பது தெரிய வந்தது. நோய்த் தொற்றுக்கு 350 போ் உயிரிழந்தனா். கரோனா பாதிப்பு விகிதம் 30.21 சதவீதமாக இருந்தது.