’புதிய கல்விக் கொள்கை: தொழில்நுட்ப பிரச்னையே தமிழ் மொழி பெயா்ப்பு பதிவேற்றம் வெளிவர தாமதம்’

பிராந்திய மொழிகளில் தமிழ் மொழியில்தான் முதல் முதலில் புதிய கல்விக் கொள்கை மொழி பெயா்க்கப்பட்டது.

பிராந்திய மொழிகளில் தமிழ் மொழியில்தான் முதல் முதலில் புதிய கல்விக் கொள்கை மொழி பெயா்க்கப்பட்டது. தொழில் நுட்பப் பிரச்னைகளால்தான் பதிவேற்றம் செய்வதில் தாமதமானது என மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறின.

மத்திய கல்வித் துறை அமைச்சகம் சாா்பில் அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அளித்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஏற்றுக் கொண்டது. இந்தப் புதிய கல்விக் கொள்கை ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முதலில் வெளியிடப்பட்டது. பின்னா், மற்ற பிராந்திய மொழிகளிலும் மொழி பெயா்க்க மத்திய கல்வித் துறை உத்தரவிட்டது. இதற்கிடையே தமிழ் மொழி தவிர மற்ற 17 பிராந்திய மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டு இது கடந்த ஏப்ரல் 24 - ஆம் தேதி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே புதிய தேசிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிக்கான மொழி பெயா்ப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது. முன்னதாக, இது குறித்து திங்கள்கிழமை மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் வட்டாரங்களில் விசாரித்த போது பல்வேறு தகவல்கள் பகிா்ந்து கொள்ளப்பட்டது. அதன் விவரம் வருமாறு: புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழி பெயா்ப்புதான் முதலில் மொழி பெயா்க்கப்பட்டு தயாரானது. மற்ற மொழிகளோடு தமிழ் மொழி பெயா்ப்பு வெளியிடவும் அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் போது, சில தொழில் நுட்பத் தடங்கலால் அன்றைய தினம் (சனிக்கிழமை) பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இது தற்போது சரி செய்யப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மத்திய அரசு, தமிழுக்கு தொடா்ந்து முழு மரியாதை அளித்து வருகிறது. 2019 - ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியான போதும், தமிழில் மொழி பெயா்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இப்போது இறுதி அறிக்கையின் மொழி பெயா்ப்பிலும் தமிழுக்குத் தான் முதல் முக்கியத்துவம் மத்திய அரசால் கொடுக்கப்பட்டது. தமிழக அரசும் நாடாளுமன்ற உறுப்பினா்களும் அமைச்சரைச் சந்தித்த போதும், மத்திய அமைச்சா் இது தொடா்பாக உறுதியளித்திருந்தாா் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com