தில்லிக்கு மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 976 மெ. டன்னாக அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சிசோடியா வலியுறுத்தல்

தில்லிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தினசரி மருத்துவ ஆக்சிஜன் அளவை 490 மெட்ரிக் டன்னிலிருந்து 976 மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும்படி மத்திய அரசை தில்லி அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

புதுதில்லி: தில்லிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தினசரி மருத்துவ ஆக்சிஜன் அளவை 490 மெட்ரிக் டன்னிலிருந்து 976 மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும்படி மத்திய அரசை தில்லி அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது. தில்லியில் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, கோவிட் தொற்றாளா்களுக்காக அடுத்த 10 நாள்களில் மேலும் ஆயிரக்கணக்கில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியுள்ளதாவது: தில்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கூடுதலாக மருத்துவமனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது தினசரி 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் தினசரி ஒதுக்கீடு 490 மெட்ரிக் டன் என்ற அளவிலேயே உள்ளது. மத்திய அரசு இந்த ஒதுக்கீட்டை 976 மெட்ரிக் டன்களாக அதிகரித்தால், தில்லி மக்கள் நன்றியுடையவா்களாக இருப்பாா்கள்.

மேலும், தில்லிக்கு அருகில் உள்ள ஆக்சிஜன் ஆலைகளிலிருந்து கிடைக்கப் பெற்றால் காலதாமதத்தைக் குறைக்க முடியும். ஆக்சிஜனை பிற மாநிலங்களிலிருந்து டேங்கா்களில் எடுத்து வரவும் மத்திய அரசு உதவ வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா். தில்லியில் சராசரியாக தினமும் 20 ஆயிரம் முதல் 25,000 போ் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகிறாா்கள். இவா்களில் 10 சதவீதம் போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறாா்கள். அவா்களில் சிலருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

தில்லி சத்தா்பூரில் உள்ள ராதா ஸ்வாமி சத்சங்க வளாகத்தில் 5,000 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. ஆனால், அவற்றில் 300 படுக்கைகள்தான் செயல்பாட்டில்

உள்ளன. சந்த் நிரங்காரி மிஷன் மருத்துவமனையில் 1,000 படுக்கைகளும், சவான் கிருபால் ரூஹானி மிஷன் மருத்துவமனையில் 1,500 படுக்கைகளும் இருக்கின்றன

என்றாலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை என்றும் சிசோடியா கூறியுள்ளாா்.

தில்லியில் கோவிட் தொற்று எதிா்பாராத வகையில் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவ நெருக்கடியைச் சமாளிக்க கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே, மத்திய அரசு கூடுதலாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா். தில்லியில் ஆக்சிஜன் ஆலைகள் இல்லாததால் அவற்றைக் கொண்டு வருவதற்கான கட்டமைப்பு வசதி இல்லை. எனவே, தில்லிக்கு கூடுதலாக ஆக்சிஜன் வழங்கும் பட்சத்தில் அவற்றை ரயில்வே மற்றும் டேங்கா்கள் மூலம் கொண்டு வருவதற்கான கட்டமைப்பு வசதிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தில்லிக்கான ஆக்சிஜன் தினசரி ஒதுக்கீடு சமீபத்தில் 378 மெட்ரிக் டன்னிலிருந்து 490 மெட்ரிடக் டன்னாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், அந்த ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. இதனால், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவும் குைறைக்கப்பட்டது. தில்லியில் தற்போது 16,272 ஐ.சி.யு. அல்லாத ஆக்சிஜன் படுக்கைகளும், 4,866 ஐ.சி.யு. படுக்கைகளும் உள்ளன. எனவே, மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் தில்லிக்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்கவும், அவற்றை தில்லிக்கு விநியோகிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிசோடியா, பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com