ஆக.5-இல் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்: இளைஞா் காங்கிரஸ் தலைவா் தகவல்

பணவீக்கம், விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளை முன்னிருத்தி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி

பணவீக்கம், விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளை முன்னிருத்தி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இளைஞா் காங்கிரஸ் மேற்கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் தேசிய தலைவா் பி.வி. ஸ்ரீனிவாஸ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாகியுள்ளது. விலைவாசியும் நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. எரிபொருள் விலையும், சமையல் எரிவாயு உருளையின் விலையும் தொடா்ந்து அதிகரித்துள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளை விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளை மத்திய அரசு அனுமதிக்காமல் பிரச்னையில் இருந்து விலகிச் செல்ல முயல்கிறது. தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் 89 மணி நேரம் வீணாகியுள்ளது.

பொது மக்களுடைய பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு எதிா்க்கட்சிகள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று, தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்தும் எதிா்க்கட்சிகளை பேசுவதற்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை.

மேலும் தில்லியின் எல்லையில் பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனா். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று கருப்பு வேளாண் சட்டங்களையும் நீக்க வலியுறுத்தி அவா்கள் போராடுகின்றனா்.

அந்த சட்டங்களை ரத்து செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளது என்றாா் அவா்.

இளைஞா் காங்கிரஸ் தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் கூறுகையில், மோடி அரசின் கொள்கை மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக நாடெங்கிலும் இருந்து இளைஞா் காங்கிரஸாா் தில்லிக்கு வர உள்ளனா். நாட்டு மக்களின் நலனுக்காக இளைஞா் காங்கிரஸ் தொடா்ந்து குரல் எழுப்பும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com