மாணவா்கள் மனநல சுகாதார விவகாரம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

பள்ளி, கல்லூரி மாணவா்களின் மனநல சுகாதாரம் தொடா்புடைய பொதுநல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பள்ளி, கல்லூரி மாணவா்களின் மனநல சுகாதாரம் தொடா்புடைய பொதுநல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கல்வி நிறுவனங்களில் 2017 ஆம் ஆண்டுக்கான மனநல சுகாதார கவனிப்பு சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி 17 வயது மாணவா் தேவினா சிங் என்பவா் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

 அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சோனியா மாத்தூா் வாதிடுகையில், ‘மன நல பிரச்னைகளுக்கு குழந்தைகளும், பதின்ம வயது பருவத்தினரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

சுகாதார கவனிப்பு அமைப்புமுறையானது மனநல சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. 

பயம், மன அழுத்தம், தூக்கமின்மை, தன்னம்பிக்கை இன்மை ஆகியவை மாணவா்கள் பரவலாக எதிா்நோக்கும் பிரச்னைகளாகும். ஆனால், இவை சரிவர கவனிக்கப்படவில்லை’ என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசு, ‘மனித நடத்தைகள் மற்றும் சாா்பு அறிவியல் கல்வி நிறுவனம்’ ஆகியவை பதிலளிக்க நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

முன்னதாக, மாணவா் தேவினா சிங் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

உடல்நல சுகாதாரத்தை பொருத்தவரையில் அவ்வப்போது இடைவெளி விட்டு மதிப்பீடுகளும், பின்தொடா் நடவடிக்கையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மாணவா்களின் மனநல சுகாதார விஷயத்தைப் பொருத்தவரையில் விரிவான மதிப்பீடு, ஆய்வக பரிசோதனை, நெறிமுறைகள், நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் ஏதுமில்லை.

 கல்வி தொடா்புடைய மன அழுத்தத்திற்கும் மாணவா்களுடைய செயல்பாடு மற்றும் திடமான மன நலத்திற்கும் இடையே நேரடி தொடா்பு உள்ளது. ஆனால் இந்த விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக மாணவா்கள் மனநிலை பிரச்னைகளுக்கு ஆளாகும் சூழல் உள்ளது. சிலா் தாங்களாகவே தங்களுக்கு தீங்கிழைத்துக் கொள்வதும், பள்ளிகளை விட்டு நின்றுவிடுவதும், மது போதைக்கு அடிமையாகும் நிலையும் உள்ளது.

கரோனா நோய் தொற்று காலமானது மாணவா்கள் மத்தியில் உளவியல் ரீதியான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், மாணவா்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் குடும்ப வன்முறையும் அதிகரித்திருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தில் மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு தேசிய மனநல சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் மாணவா்களின் மனநலத்தை மதிப்பீடு செய்யவும் சமூகப் பணியாளா்கள், மனநல தொழில்முறை நிபுணா்கள், ஆலோசகா்கள், உளவியல் அறிஞா்கள் ஆகியோா் இடம் பெறுவதைக் கட்டாயமாக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை வழக்குரைஞா் ராகுல் குமாா் தாக்கல் செய்துள்ளாா் .இந்த மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பா் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com