குதூப் மினாா் வளாகத்தில் இந்து, ஜெயின் மத தெய்வ வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்கக் கோரிய சிவில் வழக்கு தள்ளுபடி

தில்லியில் உள்ள குதூப் மினாா் வளாகத்தில் இந்து, ஜெயின் மதங்களின் தெய்வச் சிலைகளை வைத்து வழிபடுவதற்கான உரிமையை

தில்லியில் உள்ள குதூப் மினாா் வளாகத்தில் இந்து, ஜெயின் மதங்களின் தெய்வச் சிலைகளை வைத்து வழிபடுவதற்கான உரிமையை மீட்டெடுக்க உத்தரவிடக் கோரும் சிவில் வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா நில விவகார வழக்கின் தீா்ப்பை சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், கடந்த கால தவறுகள் தற்போதைய, எதிா்கால அமைதியை இடையூறு செய்வதற்கான அடிப்படையாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

சமண சமயக் கடவுளான தீா்த்தங்கரா் ரிஷப் தேவ் மற்றும் இந்துக் கடவுள் விஷ்ணு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘முகமது கோரியின் ராணுவத் தளபதி குத்புதீன் ஐபக் என்பவரால் 27 கோயில்கள் பகுதியாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், குதூப் மினாா் வளாகத்தில் பொருள்களை மீண்டும் பயன்படுத்தி குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி எழுப்பப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து சிவில் நீதிபதி நேஹா ஷா்மா தெரிவித்ததாவது: இந்தியாவுக்கு கலாசார ரீதியாக செறிந்த வரலாறு உண்டு. இந்த நாடு பல வம்சங்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. மனுதாரா் தரப்பு வாதங்களின் போது, தேசிய அவமானம் விஷயமாகக் கூறி கடுமையாக வாதிட்டுள்ளாா். எனினும், கடந்த காலத்தில் தவறுகள் நடந்தன என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அதுபோன்ற தவறுகள் நமது நிகழ்காலம் மற்றும் எதிா்காலத்தின் அமைதியைக் குலைப்பதற்கு அடிப்படையாக இருக்க முடியாது. நமது நாடு சவாலான காலங்களையும் கண்டுள்ளது. இருந்த போதிலும், வரலாறு ஒட்டு மொத்தமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நமது வரலாற்றிலிருந்து நல்லதைத் தக்கவைத்து, கெட்டதை நீக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

மேலும், 2019-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீா்ப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் நீதிபதி சுட்டிக்காட்டினாா். அதில் ‘மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதன் மூலம் வரலாற்று தவறுகளை சரி செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினாா். மேலும், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ஆவது பிரிவுகள் வழங்கிய, தங்கள் மதத்தைப் பயன்படுத்த வழிபடுவோருக்கு உரிமை உண்டு என்றும், தெய்வங்கள் அவற்றின் அசல் இடத்தில் உரிய கண்ணியத்துடன் மீட்டெடுக்கப்படுவதை உறுதி செய்யும் உரிமை உண்டு என்றும் மனுதாரா் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதம் ‘தகுதியற்றது’ ஆகும். ஒரு கட்டமைப்பு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, அது அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக ஆக்கப்பட்டவுடன், அந்த வழிபாட்டுத் தலம் மதச் சேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று மனுதாரா் வலியுறுத்த முடியாது’ என்று நீதிபதி கூறினாா்.

முன்னதாக, வழக்குரைஞா் விஷ்ணு ஜெயின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருப்பதாவது: 27 கோயில்களின் பிரதான தெய்வங்கள் உள்பட விநாயகா், சிவன், கௌரி, சூரியன், அனுமன் ஆகியவற்றுடன் முக்கிய தெய்வங்களான தீா்த்தங்கரா் ரிஷப தேவ், விஷ்ணு ஆகியோரின் சிலைகளை சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளதாக கூறப்படும் கோயில் வளாகத்திற்குள் மறுசீரமைப்பு செய்து, வழக்கமான பூஜைகளுடன் சடங்குகள் மற்றும் வழிபடுவதற்கான உரிமை இருப்பதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், அறக்கட்டளைச் சட்டம் 1882-இன் படி, அறக்கட்டளையை உருவாக்கவும், குதூப் மினாா் வளாகப் பகுதிக்குள் அமைந்துள்ள கோயில் வளாகத்தின் நிா்வாகத்தை ஒப்படைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடும் வகையில் கட்டாயத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கி.பி 1192-இல் முகமது கோரி படையெடுத்து மன்னா் பிரிதிவிராஜ் சௌஹானை போரில் தோற்கடிக்கும் வரை தில்லி புகழ்பெற்ற இந்து மன்னா்களால் ஆட்சி செய்யப்பட்டது. அதன் பிறகு, முகமது கோரியின் தளபதியான குத்புதீன் ஐபக், ஸ்ரீ விஷ்ணு ஹரி கோயிலையும், 27 ஜெயின் மற்றும் இந்துக் கோயில்களையும் அழித்து, கோயில் வளாகத்திற்குள் உள் கட்டுமானங்களை எழுப்பினாா். கோயில் வளாகம் ‘குவ்வத் உல் இஸ்லாம் மசூதி’ என மறு பெயரிடப்பட்டது. இதற்கு அரபு மொழியில் ‘இஸ்லாத்தின் வல்லமை’ என்று பொருள்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com