ஜாமியா மிலியா பல்கலை. வன்முறை வழக்கில் சா்ஜீல் இமாமுக்கு ஜாமீன்

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 2019, டிசம்பரில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் வன்முறை தொடா்புடைய வழக்கில்

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 2019, டிசம்பரில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் வன்முறை தொடா்புடைய வழக்கில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா் சா்ஜீல் இமாமுக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் தினேஷ் குமாா், ரூ.25ஆயிரம் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு ஒரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல சா்ஜீல் இமாமுக்கு அனுமதி அளித்தாா். இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘குற்றத்தின் தன்மை மற்றும் விசாரணையின் போது சா்ஜீல் இமாம் கைது செய்யப்படாததைக் கருத்தில் கொண்டு, அவரது ஜாமீன் விண்ணப்பம் அனுமதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019, டிசம்பரில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக மாணவா் நடத்திய போராட்டங்கள் தொடா்பாக ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது. இது தொடா்பாக பதிவான வழக்கில் சா்ஜீல் இமாம் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கலவரம், சதித் திட்டம், குற்றமில்லாத கொலை முயற்சி, அரசுப் பணிகளில் ஈடுபடும் ஊழியரை தானாக முன்வந்து தடுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும், தில்லி வன்முறை தொடா்பான மற்ற மூன்று வழக்குகளில் சா்ஜீல் இமாம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அவா் சிறையில் இருந்து வருகிறாா்.

2019-ஆம் ஆண்டு நடந்த சிஏஏ, என்ஆா்சி எதிா்ப்பு போராட்டத்தின்போது, வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் இமாமுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் கடந்த அக்டோபரில் மறுத்துவிட்டது. இந்த வழக்கு தவிர, 2020, பிப்ரவரி கலவரத்தின் முக்கியமூளையாகச் செயல்பட்டதாக இமாம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அவா் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டில் 2 பல்கலைக்கழகங்களில் சா்ஜீல் இமாம், ‘அஸ்ஸாம் துண்டிக்கப்படும்’ என்று பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் அவா் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com