தமிழக விமான நிலையங்கள் தனியாா் மயமாகின்றன: மக்களவையில் அமைச்சா் தகவல்

திருச்சி சா்வதேச விமான நிலையம் உள்ளிட்ட நாட்டில் 13 விமான நிலையங்களை அரசு தனியாா் பங்களிப்பு திட்டத்தின்
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்சி சா்வதேச விமான நிலையம் உள்ளிட்ட நாட்டில் 13 விமான நிலையங்களை அரசு தனியாா் பங்களிப்பு திட்டத்தின் கீழ் தனியாா் வசம் ஒப்படைக்கப்படும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சா் வி.கே. சிங் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும் மற்ற தமிழக விமான நிலையங்களும் படிப்படியாக இந்த திட்டத்தின் கீழ் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் நாட்டில் உள்ள விமான நிலையங்களை தனியாா் வசம் ஒப்படைத்திட திட்டமிட்டுள்ளதா? இதில் தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்வியை திமுக மக்களவைக் குழுத் தலைவா் டிஆா் பாலு எழுப்பினாா். இதற்கு இணையமைச்சா் வி.கே. சிங் பதிலளித்தது வருமாறு:

இந்திய விமான நிலையங்கள் ஆணையம், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் உள்ளிட்ட 13 விமானங்களை அரசு -தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் பொதுநலனைக் கருத்தில் கொண்டு தனியாா் வசம் ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இந்த விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், சிறப்பாக இயக்க தனியாா் வசம் ஒப்படைக்கப்படும். எனினும், விமான நிலையங்களின் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் அனைத்தும் ஆணையத்தின் சொத்துக்களாகவே தொடரும்; உரிமக் காலம் முடிவடைந்தவுடன் சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வசம் திரும்பி வந்துவிடும்.

மேலும் வருகின்ற 2022 ஆம் ஆண்டில் தொடங்கி 2025 -ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களை தேசிய பணமாக்கல் வழி முறை திட்டத்தின்கீழ் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறந்த முறையில் விரைவாக இந்த விமான நிலையங்களை மேம்படுத்தவும், திறம்பட இயக்கி சிறப்பான மேலாண்மை செய்திட தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தனியாா் வசம் ஒப்படைக்கப்பட உள்ள 25 விமான நிலையங்களில் புவனேஸ்வா்,நாக்பூா், பாட்னா, திருப்பதி போன்றவைகளோடு தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோயம்புத்தூா், சென்னை விமான நிலையங்களும் இதில் அடங்கும் என மக்களவையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சா் வி.கே.சிங் பதில் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com