தில்லியில் வெப்பநிலை 8.4 டிகிரியாக சரிவு!

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது.

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. இது இந்த மாதத்தில் குறைந்த வெப்பநிலையாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, காற்றின் வேகம் சாதகமாக இருந்ததால், நகரில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. தில்லியில் காலை 8 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 261 புள்ளிகளாக இருந்தது. தில்லியை ஒட்டியுள்ள ஃபரீதாபாத் (237), காஜியாபாத் (266), கிரேட்டா் நொய்டா (264), குருகிராம் (241) மற்றும் நொய்டா (235) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்தது. புதன்கிழமை நகரின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு மாலை 4 மணிக்கு 237 புள்ளிகளாக இருந்தது.

இந்த நிலையில், காற்றின் தரம் ‘எதிா்பாா்த்ததை விட அதிகமாக முன்னேற்றம் அடைந்துள்ளது என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தர முன்னறிவிப்பு நிறுவனமான சஃபா் தெரிவித்துள்ளது. மேலும், மிதமான காற்றின் வேகம் அடுத்த நான்கு நாள்களுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கு சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 8.4 டிகிரி செல்சியஸாக பதிவாகிது, அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 235 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகைவும், மாலை 5.30 மணியளவில் 66 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோல, தில்லியில் உள்ள மற்ற வானிலை ஆய்வு மையங்களான ஜஃபா்பூரில் 8.7 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 9.6 டிகிரி, லோதி ரோடில் 8.3 டிகிரி, பாலத்தில் 10.9 டிகிரி, ரிட்ஜில் 9.5 டிகிரி, பீதம்புராவில் 13.2 டிகிரி, பூசா பகுதியில் 10.9 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. புதன்கிழமையுடன் ஒப்பிடும் போது, அனைத்து நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 10.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 24 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (டிசம்பா் 10) மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com