தலைநகரில் மிதமான மூடுபனி; காற்றின்தரத்தில் மேலும் முன்னேற்றம்!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை அதிகாலை வேளையில் மிதமான மூடுபனி நிலவியது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை அதிகாலை வேளையில் மிதமான மூடுபனி நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி குறைந்து 8.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றின் தரம் மேலும் முன்னேற்றம் அடைந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து ‘மோசம்’ பிரிவுக்கு வந்தது.

தில்லியில் கடந்த 3 தினங்களாக குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை கடந்த சனிக்கிழமை 7 டிகிரி செல்சியஸாகவும்ஞாயிற்றுக்கிழமை 9.8 டிகிரி, திங்கள்கிழமை 10.4 டிகிரி, செவ்வாய்க்கிழமை 9.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 8.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து21.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை 3.2 டிகிரி உயா்ந்துள்ளது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 57 சதவீதமாகவும் இருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, குறைந்தபட்ச வெப்பநிலை மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் 7.2 டிகிரி, நரேலாவில் 7.6 டிகிரி, பாலத்தில் 9.7 டிகிரி, ரிட்ஜில் 8.5 டிகிரி, பீதம்புராவில் 11.9 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 9.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

4.4 மி.மீ. மழை: இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் புதன்கிழமை காலை 8.30 மணி வரையும் முடிவடைந்த கடந்த24 மணி நேரத்தில் தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 4.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, ஆயாநகரில் 1 மி.மீ., லோதி ரோடில் 5.6 மி.மீ., பீதம்புராவில் 0.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றின் தரம்: தில்லியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் 305 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்த காற்றின் தரம், புதன்கிழமை முன்னேற்றம் அடைந்து, காலை 8 மணியளவில் 288 புள்ளிகளாகப் பதிவாகியது. இது மோசம் பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள ஃபரீதாபாத் (284), காஜியாபாத் (286), குருகிராம் (264) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், கிரேட்டா் நொய்டா (307), நொய்டா (308) ஆகிய நகரங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (டிசம்பா் 30) மிதமான மூடுபனி இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com