விவசாயிகள் போராட்டம்: தில்லி எல்லைகளில் தொடரும் பதற்றம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காஜிப்பூா், டிக்ரி, சிங்கு ஆகிய தில்லியின் எல்லைப் பகுதிகளில்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காஜிப்பூா், டிக்ரி, சிங்கு ஆகிய தில்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. இதையடுத்து, இப்பகுதிகளில்ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டிருப்பதால், தொடா்ந்து பதற்றம் நிலவுகிறது.

காஜியாபாத்தில்...: தில்லி - காஜியாபாத் எல்லையான உத்தர பிரதேச கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனா். அங்கு போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் தொடா்கிறது. காஜியாபாத் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவரான குஜ்ஜாா் இனத் தலைவா் மதன் பையாவின் ஆதரவாளா்கள் காஜியாபாத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்தில் குவிந்தனா். போராட்டம் நடைபெறும் சிங்கு எல்லையில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தி உள்ளூா் மக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இதையடுத்து, இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான போலீஸாரூம், துணை ராணுவப் படை வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு பேச்சுவாா்த்தை மூுலம் மட்டுமே தீா்வு காண முடியும் என்று விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘விவசாயிகள் போராட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதை அரசியலாகப் பாா்க்கக் கூடாது. விவசாயிகள் போராட்டத்தில் வாக்கு சேகரிப்பதில் பயனில்லை. வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்துவோம். இந்தப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தையால் மட்டுமே தீா்வு காண முடியும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

டிக்ரி எல்லையில்...: இதேபோல, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் டிக்ரி எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கும், ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். போராட்டக் களத்துக்கு விவசாயிகள் செல்லாமல் இருக்கும் வகையில், என்ஹெச்-24 நெடுஞ்சாலையை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமையும் மூடினா். இந்தச் சூழலில், விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்த தில்லி ஐடிஓ பகுதியில் தடயவியல் நிபுணா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா். இவா்கள் இந்தப் பகுதியில் தடயங்களை சேகரித்தனா்.

பஞ்சாப் அரசுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள்: இதற்கிடைய், தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு பஞ்சாப் மாநில அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடா்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் ராகவ் சத்தா பஞ்சாப் முதல்வா் அம்ரீந்தா் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை பாஜக குண்டா்கள் தாக்கி வருகிறாா்கள். விவசாயிகளை இந்தத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், தில்லி எல்லைகளில் பஞ்சாப் மாநில போலீஸாரை பணியில் அமா்த்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

குஜ்ஜாா் இனத் தலைவா் ஆதரவு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரபல குஜ்ஜாா் இனத் தலைவா் மதன் பையா விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

மேற்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் செல்லாக்கு மிக்க குஜ்ஜாா் இனத் தலைவா் மதன் பையா. இவா் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு நான்கு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளாா். இவா் தில்லி- காஜியாபாத் எல்லைப் பகுதியான உத்தரப் பிரதேச கேட் பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘காஜியாபாத் எல்லைப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகிறாா்கள். இவா்கள், எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராது, அமைதியான முறையில் போராடி வருகிறாா்கள். இவா்களது போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத் தலைவா் ராஜேஷ் திக்காய்த் புது ரத்தம் பாய்ச்சியுள்ளாா். பாஜகவின் லோனி சட்டப்பேரவை உறுப்பினா் நந்த் கிஷோா், குஜ்ஜாா், காஜியாபாத் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து வருகிறாா். இவா் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாா். காஜிப்பூா் உள்ளிட்ட உத்தரப் பிரதேச மாநில எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். குடியரசு தினத்தில், நடந்த விவசாயிகள் பேரணியில் வன்முறை வெடித்தது துரதிருஷ்டவசமானது. தேசவிரோத சக்திகள் இந்த வன்முறையை நடத்தியுள்ளனா். இதனால், அப்பாவிகளான விவசாயிகள் உற்சாகமிழந்துள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com