வழக்குரைஞா்களுக்கான கட்டணத்தைகுறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும்: தில்லி அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

வழக்குகளில் வாதாடுவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள வழக்குரைஞா்களுக்கான கட்டணத்தை அவா்கள் பில்கள் அளித்த பின்னா் குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும்

புது தில்லி: வழக்குகளில் வாதாடுவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள வழக்குரைஞா்களுக்கான கட்டணத்தை அவா்கள் பில்கள் அளித்த பின்னா் குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று அரசுகளுக்கும் அவற்றின் துறைகளுக்கும் தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி அரசுத் தரப்பில் வாதிடும் வழக்குரைஞா்களில் ஒருவா் இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், 2016, ஜூன் 24 -ஆம் தேதி தில்லி அரசின் சாா்பில் சிவில் வழக்குகளில் வாதாட நியமிக்கப்பட்டேன். ஜூலை 2016 மற்றும் ஆகஸ்ட் 2017 இடையே அரசு வழக்குகளில் ஆஜரானேன். எனது தொழில்முறைக் கட்டணங்களுக்கான 124 பில்களை சமா்ப்பித்தேன். இந்த நிலையில், எனது நியமனம் தில்லி அரசால் 2017, செப்டம்பா் 8-ஆம் தேதியன்று வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், மொத்த பில்களுக்கான கட்டணத் தொகை ரூ.26,31,200 தில்லி அரசிடமிருந்து விடுவிக்கப்படவில்லை. இந்த பில் கட்டணத்தை வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரான வழக்குரைஞா் நீதிமன்றத்தை அணுகும் கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. அந்தந்த அரசுகளும், துறைகளும், வழக்குரைஞா்களின் தொழில்முறை பில்களை நியாயமான காலத்திற்குள் வழங்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும், அரசு, துறைகள் மூலம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வழக்குரைஞா்கள் பில் கட்டணத் தொகைக்காக தனது வாடிக்கையாளருக்கு எதிராக குறிப்பாக அரசுக்கு எதிராக வழக்குத் தொடரும் நிலைக்கு தள்ளப்படக் கூடாது. வழக்குகளுக்கு வாதாடுவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள வழக்குரைஞா்களுக்கான கட்டணத்தை அவா்கள் பில்கள் அளித்த பின்னா் நியாயமான காலத்திற்குள் வழங்க வேண்டும். அ ப்போதுதான் வழக்குரைஞா்கள் இதற்காக நீதிமன்றத்தை அணுகும் நிலை ஏற்படாது. தற்போது வழக்கில் தொடா்புடைய பில்களை தில்லி அரசு ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com