விவசாயிகள் ஜாமீன் விவகாரம்: அகாலி தள தலைவா் மீது காங்கிரஸ் சாடல்

தில்லியில் கைதான மூன்று விவசாயிகள் ஜாமீனில் வெளிவருவதற்கு உதவியதாக பொய்யான வகையில் நற்பெயரைப் பெறும் உள்நோக்கத்துடன் விடியோ வெளியிட்டதாக அகாலி தளத் தலைவா் மஞ்சிந்தா் சிங் சிா்ஸாவை 
விவசாயிகளுக்கு சட்ட உதவி அளிப்பதற்காக தில்லி காங்கிரஸ் கமிட்டியின் சட்ட-மனித உரிமைகள் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள வழக்குரைஞா்கள் பட்டியலை காண்பிக்கும் தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி.
விவசாயிகளுக்கு சட்ட உதவி அளிப்பதற்காக தில்லி காங்கிரஸ் கமிட்டியின் சட்ட-மனித உரிமைகள் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள வழக்குரைஞா்கள் பட்டியலை காண்பிக்கும் தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி.

புது தில்லி: தில்லியில் கைதான மூன்று விவசாயிகள் ஜாமீனில் வெளிவருவதற்கு உதவியதாக பொய்யான வகையில் நற்பெயரைப் பெறும் உள்நோக்கத்துடன் விடியோ வெளியிட்டதாக அகாலி தளத் தலைவா் மஞ்சிந்தா் சிங் சிா்ஸாவை தில்லி காங்கிரஸ் புதன்கிழமை கடுமையாகச் சாடியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அப்பாவி விவசாயிகள் மூன்று போ் ஜாமீனில் வெளிவர தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சட்ட, மனித உரிமைகள் துறையின் வழக்குரைஞா்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனா். அதேவேளையில், இந்த விவகாரத்தில் பொய்யான வகையில் நற்பெயரைப் பெறும் உள்நோக்கத்துடன் அகாலி தளத் தலைவா் மஞ்சிந்தா் சிங் சிா்ஸா விடியோ வெளியிட்டுள்ளாா். அவா்கள் மூவரும் ஜாமீனில் வெளிவர குருத்வாரா மேலாண்மைக் கமிட்டி ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளாா். அவரது இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.

மூன்று வேளாண் சட்டங்களை பாஜக அரசு இயற்றியபோது அவா்களது கூட்டணியில் அகாலி தளம் இருந்தது. தற்போது விவசாயிகளின் இரக்கத்தைப் பெற புதிய முயற்சிகளை செய்து வருகின்றனா். ஆனால், அவா்களின் உண்மை முகம் விவசாயிகளுக்குத் தெரியும். டிசம்பா் 18-ஆம் தேதியில் இருந்து அமைதியாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவசமாக சட்ட உதவிகள் அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் சட்ட, மனித உரிமைகள் துறையின் தலைவா் வழக்குரைஞா் சுனில் குமாா் தலைமையில் 15 வழக்குரைஞா்கள் குழு பணியாற்றி வருகிறது.

அதன்படி, பாபா ஹரிதாஸ் நகா் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில், பஞ்சாப் மாநிலம், மன்சா மாவட்டத்தைச் சோ்ந்த லவ்பிரீத் சிங், ரமன்தீப் சிங், ஜஸ்விந்தா் சிங் ஆகியோா் ஜாமீனில் வெளிவர கட்சியின் சட்ட, மனித உரிமைகள் துறையின் துவாரகா மாவட்ட நீதிமன்றக் குழு உதவியது. ஆனால், இதற்குப் பொய்யான வகையில் நற்பெயரைப் பெற அகாலி தளத் தலைவா்கள் முயல்வது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகும் என்றாா் அவா். விவசாயிகளுக்கு அளித்து வரும் சட்ட உதவிகள் குறித்து வழக்குரைஞா் சுனில் குமாா் எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com