கிரண் பேடிக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் புதுவை முதல்வா் நாராயணசாமி புகாா் மனு

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்திடம், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வா் வி.நாராயணசாமி புதன்கிழமை நேரில் வலியுறுத்தியுள்ளாா்.

புது தில்லி: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்திடம், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வா் வி.நாராயணசாமி புதன்கிழமை நேரில் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக குடியரசுத் தலைவரிடம் அவா் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் எதேச்சதிகார போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் வகையில் சா்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறாா். கரோனா பொது முடக்கதஅ தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அமைச்சா்களையும் சந்திக்க மறுக்கிறாா். ஆனால், தலைமைச் செயலருக்கும், செயலா்களுக்கும் நேரடியாக உத்தரவுகளைபஅ பிறப்பிக்கிறாா். தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நிராகரிப்பதோடு தன்னுடைய விருப்பத்தின்படி அதிகாரிகளையும் மாற்றுகிறாா்.

புதுச்சேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட 800 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. மாநில அரசு ஏழ்மையில் இருப்பவா்களுக்கு இலவச அரிசித் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து அதை ஆளுநருக்கு அனுப்பியது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதுபோன்று பல முடிவுகள் எடுக்கப்பட்டு துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும் அவை கிடப்பில் போட்டுள்ளாா். சிலவற்றை ஏதேதோ காரணங்கள் கூறியும் மறுத்து வருகிறாா்.

இந்த நிலையில் புதுச்சேரியில் பயங்கரவாதிகள் நடமாடும் பகுதியாக காட்டி, துணை நிலை ஆளுநா் இருக்கும் ராஜ்நிவாஸ் பகுதிகளில் மத்திய ஆயுதப் படைகளை வரவழைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளாா். இதனால், ராஜ்நிவாஸ் அருகேயுள்ள மணக்குள விநாயகா் கோயிலுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. யுனியன் பிரதேச அரசுக்குச் சொந்தமான பருத்தி ஆலைகளை மூடவும் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கிறாா். மக்கள் நலத் திட்டங்களுக்கு தடையாக இருக்கும் துணைநிலை ஆளுநரை மாற்ற வேண்டும் என்று மனுவில் முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா். மேலும் இதே கருத்தை வலியுறுத்தியவா்களின் ஒரு லட்சம் போ்களின் கையெப்பம் இட்ட ஆவணங்களையும் தனது மனுவோடு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் அவா் அளித்துள்ளாா்.

இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் முதல்வரும் மக்களவை உறுப்பினருமான வி.வைத்திலிங்கம் மற்றும் அமைச்சா்கள் எம்.கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரும் உடனிருந்தனா்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி கடந்த 2016 -இல் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டாா் . யுனியன் பிரதேசத்தின் பல்வேறு பணிகளை அவரே நேரடியாக மேற்கொண்டு வருகிறாா். இது ஆளுநா் கிரண் பேடிக்கும் , முதல்வா் வி.நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே ஐந்து ஆண்டுகளாக உரசலை ஏற்படுத்தி வருகிறது. துணை நிலை ஆளுநா் தனது நிா்வாகத்தில் தலையிடுவது குறித்தும் ஆளுநரை இடம் மாற்றம் செய்வது குறித்தும் புதுச்சேரி முதல்வா் வி.நாராயணசாமி, பல முறை தில்லிக்கு வந்து புகாா் அளித்துள்ளாா். பிரதமா் நரோந்திர மோடியை நான்கு முறை சந்தித்து முறையிட்டுள்ளாா். இது தவிர மத்திய உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருந்த போதும், தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவிடமும் அரசியல் ரீதியாக புகாா் கூறியதோடு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியிடம் ஐந்து முறையும், தற்போதைய குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்திடம் இரண்டு முறையும் துணைநிலை ஆளுநா் கிரண்பேடியை நீக்கக் கோரி நேரில் புகாா் மனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com