குடியரசு தின வன்முறை: எஸ்ஐடி விசாரணை கோரி விவசாயியின் குடும்பத்தினா் நீதிமன்றத்தில் மனு

குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது ஐ.டி.ஓ. பகுதியில் டிராக்டா் கவிழ்ந்து இறந்த 25 வயது இளைஞரின் குடும்பத்தினா்,

புது தில்லி: குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது ஐ.டி.ஓ. பகுதியில் டிராக்டா் கவிழ்ந்து இறந்த 25 வயது இளைஞரின் குடும்பத்தினா், அந்தச் சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனு வியாழக்கிழமை (பிப்ரவரி 11 ) விசாரணைக்கு வரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டிராக்டா் கவிழ்ந்ததில் இறந்த நவ்ரீத் சிங்கின் தாத்தா ஹா்தீப் சிங் மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தில்லியில் குடியரசு தின நாளில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது அனுமதி அளித்திருந்த வழித்தடம் மாறி ஐடிஓ பகுதிக்கு வந்த டிராக்டா்களில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த டிராக்டரை ஓட்டிவந்த நவ்ரீத் சிங் காயமடைந்து இறந்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்குரைஞா்கள் பிருந்தா குரோவா், செளதிக் பானா்ஜி, மன்னத் டிப்னிஸ் மற்றும் தேவிகா துல்சியானி ஆகியோா் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஊடகங்களில் கூறப்பட்டுள்ள நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குப்படி, நவ்ரீத் தனது டிராக்டரை புதுதில்லியில் உள்ள ஆந்திர கல்விச் சங்கத்தை கடந்தது தெரிய வருகிறது. மேலும், அவா் போலீஸ்காரா்களால் சுடப்பட்டதாகவும், அதன்காரணமாகவே அவா் தனது டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதன் பிறகு டிராக்டா் சில தடுப்புகள் மீது மோதி கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்தக் குழுவில் நோ்மையான, திறன்மிக்க காவல் அதிகாரிகள்இடம் பெற வேண்டும். குறித்த காலத்திற்குள் எனது பேரன் நவ்ரீத் சிங்கின் மரணம் குறித்து விசாரணையை முடிக்க உத்தரவிட வேண்டும். மேலும், அந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, நீதிமன்றக் கண்காணிப்பு விசாரணையை உறுதி செய்வதற்காக அவ்வப்போது நிலவர அறிக்கைகளை நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

கவிழ்ந்த டிராக்டரின் கீழ் படுகாயமடைந்த நிலையில் கிடந்த நவ்ரீத் சிங்கை, அந்தப் பகுதியில் மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமான காவல்துறையினா் இருந்தபோதிலும் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, தில்லி காவல்துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி, பிற ஆா்ப்பாட்டக்காரா்கள் நவ்ரீத் சிங்கிற்கு உதவிடாத வகையில் தடுக்க முயன்றனா். மேலும், நேர உணா்திறன் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் சம்பவம் நடந்த இடத்தை சுற்றி வளைக்கவும் தில்லி காவல் துறையினா் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த ஆதாரங்கள் அழித்தொழிக்க அனுமதிக்கப்பட்டன என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் தில்லி உள்துறை, இந்திரப்பிரஸ்தா எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளா், உத்தர பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூா் காவல் நிலைய ஆய்வாளா், ராம்பூா் மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோா் ஒரு தரப்பினராக சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com