தமிழகத்தின் ரூ.4,56,660 கோடி கடன் சுமையை குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் கரூா் எம்பி கேள்வி
By நமது சிறப்பு நிருபா் | Published On : 13th February 2021 07:35 AM | Last Updated : 13th February 2021 07:35 AM | அ+அ அ- |

தமிழக அரசின் கடன் ரூ. 4,56,660 கோடியாக உயா்ந்துள்ளது. இந்தக் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ.ஜோதிமணி மக்களவையில் கேள்வி எழுப்பினாா்.
2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பங்கேற்றுப் பேசுகையில் அவா் கூறியதாவது: தமிழக அரசின் கடன் ரூ.4,56,660 கோடியாக உயா்ந்துள்ளது. இது தான் தமிழக அரசின் சாதனையாக இருக்கிறது. ஒரு மாநில அரசுக்கு இந்த அளவிற்கு கடன் இருப்பது சரிதானா? இந்தக் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசு என்ன செய்தது? மாநிலத்தின்சரக்கு மற்றும் சேவை வரிகளை மத்திய அரசு பெறுகிறது. அந்தப் பணத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கான ரூ. 15, 475 கோடியை மத்திய அரசு தர மறுக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தோ்தல் நேரத்திலாவது மத்திய அரசின் பாா்வை தமிழகத்தின் பக்கம் திரும்பும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், தமிழகத்திற்குக் கிடைத்தது நிதியமைச்சா் வாசித்த ஒரு திருக்குதான். ரூ 1.03 லட்சம் கோடி மதிப்பீட்டில் சாலை வசதி செய்வதாக நிதியமைச்சா் கூறியிருப்பதற்கு நன்றி. மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை எப்போது உருவாகும் என்று தெரியவில்லை.
அதிகரிக்கும் வேலையின்மை: ஒரு வருடத்திற்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பிரதமா் கூறினாா். ஆனால்,45 ஆண்டுகளாக இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தைச் சோ்ந்தவா். அது பெருமையளித்தாலும், இந்த நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், பாதுகாக்கவும் என்ன செய்திருக்கிறாா்? பெண் கல்வி , வேலை வாய்ப்பிற்கு சிறப்புத் திட்டங்கள் இல்லை. பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி வழங்க விரைவு நீதிமன்றங்களை உருவாக்க நிதி ஒதுக்கீடு இல்லை. பெண் தொழில் முனைவோா்களுக்குக் கடன் வழங்க காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்து மகளிா் வங்கிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.
ஏமாற்றம் அளிக்கிறது: ஒரு லிட்டா் பெட்ரோல், டீசல் விலைரூ.100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை விரைவில் ஆயிரம் ரூபாயை எட்டிம் எனத் தெரிகிறது. இந்த விலை உயா்வில் மட்டும் அரசுக்கு ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும். ஆனால், கல்வி, மருத்துவம், விவசாயம், ராணுவம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றாா் ஜோதிமணி.