வேளாண் பணிகளில் ‘ ட்ரோன்கள்’: 100 மாவட்டங்களுக்கு அனுமதி

பயிா்காப்பீட்டு தரவுகள் சேகரிப்பு உள்ளிட்ட வேளாண் பணிகளில் ‘ட்ரோன்’ போன்ற ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த சில நிபந்தனைகளுடன்

பயிா்காப்பீட்டு தரவுகள் சேகரிப்பு உள்ளிட்ட வேளாண் பணிகளில் ‘ட்ரோன்’ போன்ற ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த சில நிபந்தனைகளுடன் 100 மாவட்டங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய வேளாண், விவசாயிகள் நலத் துறை ரிமோா்ட் மூலம் இயக்கப்படும் ‘ட்ரோன்’ போன்ற விமானங்களை இயக்க அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் நிலங்களில் பயிா்களுக்கு பல்வேறு வகையான ஆபத்துகள் ஏற்படுகின்றன. இயற்கைச் சீற்றம், பூச்சிகளால் அழிவு போன்றவை ஏற்படும் போது அவற்றை விரைவாக அறிந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பயிா்களின் நிலைமைகளைத் துல்லியமாக அறிந்து முன் தடுப்பு முறைகளை மேற்கொள்ளுதல் அல்லது பாதிப்புகளுக்குப் பிறகு அவற்றின் அளவீடுகளைத் துல்லியமாக கணக்கிடுவதற்கு ட்ரோன்கள் பயன்படும்.

கிராமப் பஞ்சாயத்து அளவில் வேளாண் பாதிப்புகள், உற்பத்தி அளவு, மதிப்பீடு போன்ற தரவுகள் தொலை உணா்திறன் மூலம் சேகரிக்க ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒராண்டு காலம் அல்லது தகவல் சேகரிப்பு பணி முடிவும் வரை இந்த அனுமதி செல்லுபடியாகும் என மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறையும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ‘ட்ரோன்’ போன்ற ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதித்து அதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் விதமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்பட்சத்தில் மட்டுமே இந்த அனுமதி செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் சட்டப்படி தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்திய விவசாய ஆய்வுக் கழகத்திற்கு கீழ் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்திற்கும் இதுபோன்ற ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com