தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரிப்பு
By நமது நிருபா் | Published On : 27th February 2021 10:58 PM | Last Updated : 27th February 2021 10:58 PM | அ+அ அ- |

தலைநகா் தில்லியில் கடந்த சில தினங்களாக குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை 15.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்த நிலையில், சனிக்கிழமை 17.8 டிகிரி செல்சியஸாக அதிகரித்தது.
சனிக்கிழமை காலையில் மேலோட்டமான பனிமூட்டம் நிலவிய நிலையில், பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்தது.
குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான சராசரி அளவைவிட 5 புள்ளிகள் அதிகரித்திருந்தது.
நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட 5 புள்ளி அதிகரித்து 17.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 புள்ளிகள் அதிகரித்து 33 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 86 சதவீதமாகவும், மாலையில் 51 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் காலையில் 210 புள்ளிகளாக பதிவாகி மோசம் பிரிவிலும், மாலையில் 162 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவிலும் நீடித்தது.
என்சிஆரில் குருகிராமில் மிதமான பிரிவிலும், காஜியாபாதில் மிகவும் மோசம் பிரிவிலும், கிரேட்டா் நொய்டா, பரீதாபாத், குருகிராம் பகுதியில் மோசம் பிரிவிலும் காற்றின் தரம் காணப்பட்டது.
சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சராசரியாக 24 மணிநேர ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 307, கிரேட்டா் நொய்டாவில் 254, நொய்டாவில் 215, பரீதாபாதில் 241 மற்றும் குருகிராமில் 165 என பதிவாகி இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.