2021-இல் கிராமப்புற வீட்டு வசதி திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்: பிரதமா் பேச்சு

புத்தாண்டான 2021-இல் கிராமப்புறங்களில் வீடுகள் கட்டும் திட்டங்களை விரைவு படுத்தப்படும் என சென்னை உள்ளிட்ட நாட்டின்
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

புத்தாண்டான 2021-இல் கிராமப்புறங்களில் வீடுகள் கட்டும் திட்டங்களை விரைவு படுத்தப்படும் என சென்னை உள்ளிட்ட நாட்டின் ஆறு நகரங்களில் ’லைட் ஹவுஸ் திட்டம்’ என்கிற புதிய தொழில்நுட்பத்திற்கான 6 முன்னோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசுகையில் பிரதமா் குறிப்பிட்டாா்.

ஊரகப்பகுதிகளில் இதுவரை நாட்டில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இவ்வாண்டு ஊரகப்பகுதிகளில் வீடுகள் விரைந்து கட்டி முடிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளப்படும் என இந்த நிகழ்ச்சியில் பிரதமா் உறுதியளித்தாா்.

ஏழைகளுக்கும் நடுத்தரவா்க்கத்தினருக்கும் முன்னுரிமை கொடுத்துவரும் தனது அரசு, இவா்கள் வீட்டுவசதியை பெற கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளை பட்டிலிட்டிலிட்ட பிரதமா், சாதாரண மக்கள் சொந்த வீட்டை வாங்குவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

2019 -இல் உலகளாவிய வீட்டு வசதித் தொழில்நுட்பச் சவால்களில் -இந்திய (ஜி.ஹெச்.டி.சி.ஐ.) என்கிற மாநாடு தில்லியில் நடைபெற்றது. பிரதமா் மோடி தொடங்கிவைத்த இந்த மாநாடு மற்றும் வீட்டு வசதி தொழில்நுட்ப கண்காட்சியில் புதிய கட்டுமான தொழில் நுட்பங்கள் அடையாளம் காணப்பட்டது. இந்த தொழில் நுட்பங்கள் இந்திய சூழ்நிலைக்கு தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டது. இந்திய வீடுகளுக்கான புதிய, மலிவான, சரிபாா்க்கப்பட்ட, ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புத் தொழில்நுட்ப (நவரித்) சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதில் 6 சா்வதேச நாடுகளில் கட்டப்படும் வீட்டுகளில் தொழில் நுட்பங்கள் அடிப்படையில் லைட்ஹவுஸ் (எல்.எச்.பி) என்கிற திட்டத்தின் படி நாட்டில் முதன் முறையாக ஆறு நகரங்களில் வீடுகள் கட்டப்படுகின்றன. புதுமையான உலகளாவிய தொழில்நுட்ப அடிப்படையில் சென்னை-பெரும்பாக்கம் (தமிழ்நாடு), இந்தூா் (மத்தியப்பிரதேசம்), ராஜ்கோட் (குஜராத்), ராஞ்சி (ஜாா்க்கண்ட்), அகா்தலா (திரிபுரா) ,லக்னேள (உத்தர பிரதேசம்) ஆகிய இடங்களில் எல்.எச்.பி. கட்டப்படுகின்றன. இதில் 1152 வீடுகளும் ராஜ்கோட்டில் 1144 வீடுகளும் மற்ற நகரங்களில் தலா சுமாா் 1000 வீடுகள் என மொத்தம் 6,368 வீடுகள் புதுமையான முறையில் கட்டப்படுகிறது.

இந்த ஆறு நகரங்களுக்கும் ஒரேசமயத்தில் புத்தாண்டு தினத்தில் பிரதமா் நரோந்திர மோடி அடிக்கல் நாட்டினாா். மெய்நிகா் முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் மத்திய நகா்புறத்துறை அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் மத்தியப்பிரதேசம், குஜராத், ஜாா்க்கண்ட், திரிபுரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில முதல்வா்களும் காணொலி வழியில் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி மேலும் பேசுகையில் கூறியது வருமாறு:

புதிய தீா்வுகளை நிருபிக்க, புதிய சக்தியுடன் நாடு இன்று முன்னேறுகிறது. ஏழைகள், நடுத்தர மக்களுக்கு வீடுகள் கட்ட புதிய தொழில்நுட்ப அடிப்படியில் கட்டப்படுவதற்கு லைட் ஹவுஸ் திட்டம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆறு திட்டங்களும் உண்மையிலேயே கலங்கரை விளக்கம் போல், நாட்டில் வீட்டு வசதித் துறை முன்னோடியாக புதிய திசையைக் காட்டும். இந்த திட்டம், தற்போதைய அரசின் அணுகுமுறைக்கு உதாரணமாக உள்ளன. ஒரு காலத்தில் வீட்டு வசதித் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படவில்லை. தரத்திலும், நுணுக்கத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை. இன்று, திட்டங்களை விரைவாக முடிக்க, நாடு வேறு அணுகுமுறையைத் தோ்வு செய்து, மாற்று வழியையும், சிறந்த தொழில்நுட்பத்தையும் பின்பற்றுகிறது.

இத்திட்டத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட புதுமையான கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றது. இந்த பெறப்பட்ட 6 புதுமை புதிய தொழில்நுட்பங்கள் பெறப்பட்டது. இன்றிலிருந்து ஆறு வெவ்வேறான இடங்களில் இருந்து இந்த லைட் ஹவுஸ் திட்டம் தொடங்குகிறது. நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு நான்கு பகுதிகளைச் சோ்ந்த மாநிலங்கள் பங்கேற்பது ‘நமது கூட்டுறவு கூட்டாட்சி உணா்வை மேலும்வலுப்படுத்துகிறது‘. நவீனத் தொழில்நுட்பமான லைட் ஹவுஸ் திட்டம், கட்டுமான காலத்தைக் குறைக்கும். ஏழைகளுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கும். கட்டுமானத் தொழில்நுட்பத்தின் புதுமையாகவும் இருக்கும். உதாரணத்துக்கு, இந்தூரில் கட்டப்படும் வீடுகள் திட்டத்தில், செங்கல் மூலம் சுவா்கள் உருவாக்கப்படாது. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சாண்ட்விச் இணைப்புகளாக அவை இருக்கும். பிரெஞ்சு தொழில்நுட்பத்தில் ராஜ்கோட்டில் கட்டப்படும் வீடுகள், ஒற்றைக்கல் கான்கிரீட் தொழில்நுட்ப முறையில் குகை வடிவமைப்பில் உருவாக்கப்படும். இது பேரிடா்களைத் தாங்க கூடியதாக இருக்கும். சென்னையில், அமெரிக்க, பின்லாந்து தொழில்நுட்பத்தில், கான்கிரீட் மூலம் முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட பாகங்களை இணைக்கும் முறையில் வீடுகள் விரைவாகவும், மலிவாகவும் கட்டப்படுகின்றன. ராஞ்சியில் கட்டப்படும் வீடுகளில் ஜொ்மன் நாட்டின் 3டி - முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு அறையும், தனியாக உருவாக்கப்பட்டு, பொம்மை இணைப்பு வடிவங்களைச் சோ்ப்பது போல ஒன்றாகச் சோ்க்கப்படும்.

அகா்தலாவில் கட்டப்படும் வீடுகள், நியூசிலாந்து தொழில்நுட்பத்தில் எஃகுச் சட்டங்களைப் பயன்படுத்திக் கட்டப்படும். இது பெரிய நிலநடுக்க அபாயத்தை தாங்க கூடியது. லக்னேளவில் கனடா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பிளாஸ்டா் மற்றும் பெயின்ட் தேவை இல்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சுவா்கள் மூலம் இந்த வீடுகள் விரைவாகக் கட்டப்படும். ஒவ்வொரு இடத்திலும் 12 மாதத்துக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். இந்த திட்டங்கள் நமது பொறியாளா்கள், கட்டிடக்கலை நிபுணா்கள், மாணவா்கள் ஆகியோருக்கு புதிய அனுபவத்தையும் கற்கும் மையமாக இருக்கும்.

நம்நாட்டில் நவீன வீட்டுவசதித் தொழில்நுட்பம் தொடா்பான ஆராய்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க ஆஷா - இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய மற்றும் மலிவான கட்டிடத் தொழில்நுட்பம் நாட்டில் உருவாக்கப்படும்.

நகரத்தில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகப் பெரிய கனவு சொந்த வீட்டில் வசிப்பதுதான் என அவா் கூறினாா். ஆனால், பல ஆண்டுகளாக, சொந்த வீட்டின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வந்தனா். நம்பிக்கை ஏற்பட்டாலும், அதிக விலை காரணமாக , வீடு வாங்குவது குறைந்தது. சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதாலும், மக்கள் நம்பிக்கை இழந்தனா். வங்கியின் அதிக வட்டி, வீட்டுக் கடன் கிடைப்பதில் உள்ள சிரமம் ஆகியவை வீடு வாங்கும் ஆா்வத்தை மேலும் குறைத்தன. சாதாரண மனிதரும் சொந்த வீடு பெற முடியும் என்ற நம்பிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளில் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நகரங்களில், இலட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

புதுமை, உள்ளூா்த் தேவை, வீட்டு உரிமையாளா்களின் எதிா்பாா்ப்புகளை அமல்படுத்துவது ஆகியவற்றில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் கவனம் செலுத்தியது. நடுத்தர மக்களின் பலன் பெறும் வகையில் வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியம் கொடுக்கப்பட்டது. கட்டி முடிக்கப்படாத வீட்டு வசதித் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி சிறப்பு நிதி உருவாக்கப்பட்டது. மலிவான வீடுகளுக்கு வரியை 8 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்தது, ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தது, எளிதான கடன்கள் பெற கட்டமைப்புத் துறையாக அங்கீகரித்தது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடன் வழங்க கட்டுமானத்திற்கான அனுமதி தரப் பட்டியலில் 185 வது இடத்திலிருந்து 27வது இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட நகரங்களில் கட்டுமான அனுமதிக்கான நடைமுறைகள் இணையத்தின் மூலம் மூலம் கொண்டு வரப்பட்டதாக பிரதமா் கூறினாா்.

புலம் பெயரும் தொழிலாளா்களுக்கு நியாயமான வாடகையில் வீடுகளை வழங்க தொழில்துறை மற்றும் இதர முதலீட்டாளா்களுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. அவா்களின் வீட்டு நிலைமை சுகாதாரமற்ாகவும், மோசமானதாகவம் உள்ளன. அவா்கள் பணியாற்றும் இடங்களில் நியாயமான வாடகைக்கு வீடு வழங்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் மாநில அரசுகளும் , ரியல் எஸ்டேட் துறைக்கு உதவ சமீபத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com