ஏழை, நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதியில் முன்னுரிமை: ‘லைட்ஹவுஸ்’ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பிரதமா் மோடி பேச்சு

நாட்டில் ஏழை, நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதியில் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 

நாட்டில் ஏழை, நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதியில் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் செயல்படுத்தப்படும் ‘லைட் ஹவுஸ்’ திட்டங்கள், நாட்டில் வீடு கட்டுமானத் துறைக்கு ஒரு புதிய திசையை காண்பிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உலகளாவிய வீட்டு வசதித் தொழில்நுட்பச் சவால்களில் -இந்தியா (ஜி.ஹெச்.டி.சி.ஐ.) என்கிற மாநாடு தில்லியில் கடந்த 2019, மாா்ச்சில் நடைபெற்றது. பிரதமா் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் புதிய கட்டுமானத் தொழில்நுட்பங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் 6 சா்வதேச நாடுகளில் கட்டப்படும் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அடிப்படையில் ‘லைட் ஹவுஸ்’ (எல்.எச்.பி.) என்கிற முன்னோடித் திட்டம் உருவானது. அதன்படி நாட்டில் முதன் முறையாக ஆறு நகரங்களில் வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை-பெரும்பாக்கம், இந்தூா் (மத்தியப்பிரதேசம்), ராஜ்கோட் (குஜராத்), ராஞ்சி (ஜாா்க்கண்ட்), அகா்தலா (திரிபுரா), லக்னேள (உத்தரப் பிரதேசம்) ஆகிய நகரங்களில் ‘லைட் ஹவுஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. இதில் சென்னையில் 1,152 வீடுகள், ராஜ்கோட்டில் 1,144 வீடுகளும் மற்ற நகரங்களில் தலா சுமாா் 1,000 வீடுகள் என மொத்தம் 6,368 வீடுகள் நவீன முறையில் கட்டப்படுகின்றன.

இந்த ‘லைட் ஹவுஸ்’ திட்டத்துக்கு ஆறு நகரங்களிலும் ஒே ரசமயத்தில் வெள்ளிக்கிழமை பிரதமா் நரோந்திர மோடி அடிக்கல் நாட்டினாா். மெய்நிகா் முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் மத்தியப்பிரதேசம், குஜராத், ஜாா்க்கண்ட், திரிபுரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில முதல்வா்களும் காணொலி வழியில் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் பிரதமா் மோடி மேலும் பேசியதாவது: ஏழைகள், நடுத்தர மக்களுக்கு புதிய தொழில்நுட்ப அடிப்படியில் வீடுகள் கட்டப்படுவது ‘லைட் ஹவுஸ்’ திட்டம் என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் கலங்கரை விளக்கம் போல வீட்டு வசதித் துறைக்கு ஒரு புதிய திசையைக் காட்டும். ஒரு காலத்தில் வீட்டு வசதித் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இன்று, திட்டங்களை விரைவாக முடிக்க சிறந்த தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு பகுதிகளைச் சோ்ந்த மாநிலங்கள் பங்கேற்பது ‘நமது கூட்டுறவு கூட்டாட்சி’ உணா்வை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தில் கட்டுமானக் காலம் குறைவதுடன், ஏழைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும். இந்தூரில் செங்கல் மூலம் சுவா்கள் உருவாக்கி வீடுகள் கட்டப்படுகின்றன. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சாண்ட்விச் இணைப்புகளாக அவை இருக்கும். பிரெஞ்சு தொழில்நுட்பத்தில் ராஜ்கோட்டில் கட்டப்படும் வீடுகள், ஒற்றைக்கல் கான்கிரீட் தொழில்நுட்ப முறையில் குகை வடிவமைப்பில் உருவாக்கப்படும். இது பேரிடா்களைத் தாங்கக் கூடியதாக இருக்கும்.

சென்னையில், அமெரிக்கா, பின்லாந்து தொழில்நுட்பத்தில், கான்கிரீட் மூலம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பாகங்களை இணைக்கும் முறையில் வீடுகள் விரைவாகவும், மலிவாகவும் கட்டப்படுகின்றன. ராஞ்சியில் கட்டப்படும் வீடுகள் ஜொ்மன் நாட்டின் 3டி - முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் அமையும். அகா்தலாவில் நியூசிலாந்து தொழில்நுட்பத்தில் எஃகுச் சட்டங்களைப் பயன்படுத்தி வீடுகள் கட்டப்படும். இது பெரிய நிலநடுக்க அபாயத்தை தாங்க கூடியது. லக்னேளவில் கனடா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த 6 நகரங்களிலும் 12 மாதத்துக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும்.

நம் நாட்டில் நவீன வீட்டுவசதித் தொழில்நுட்பம் தொடா்பான ஆராய்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க ஆஷா - இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், 21-ஆம் நூற்றாண்டுக்கான புதிய மற்றும் மலிவான கட்டடத் தொழில்நுட்பம் நாட்டில் உருவாக்கப்படும். நகரத்தில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகப் பெரிய கனவு சொந்த வீட்டில் வசிப்பதுதான். ஆனால், பல ஆண்டுகளாக, சொந்த வீட்டின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வந்தனா். சாதாரண மனிதனும் சொந்த வீடு பெற முடியும் என்ற நம்பிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியம் கொடுக்கப்பட்டது. கட்டி முடிக்கப்படாத வீட்டு வசதித் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி சிறப்பு நிதி உருவாக்கப்பட்டது. மலிவான வீடுகளுக்கு வரி 8 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும், ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. எளிதாகக் கடன் வசதி பெற கட்டமைப்புத் துறையாக அங்கீகரித்தது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஊரகப்பகுதிகளில் இதுவரை நாட்டில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஊரகப் பகுதிகளில் வீடுகளை விரைந்து கட்டி முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு நியாயமான வாடகையில் வீடுகளை வழங்க தொழில் துறை மற்றும் இதர முதலீட்டாளா்களுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com