மாணவா்களின் புத்தக சுமையைக் குறைக்க புதிய கொள்கைதில்லி அரசு நடவடிக்கை

மாணவா்களின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில், தில்லி அரசு ‘புதிய பள்ளி பை கொள்கை’ யை உருவாக்கியுள்ளது.

மாணவா்களின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில், தில்லி அரசு ‘புதிய பள்ளி பை கொள்கை’ யை உருவாக்கியுள்ளது. இந்தக் கொள்கையை உடனடியாக செயல்படுத்துமாறு தேசியத் தலைநகரில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தில்லி அரசு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பள்ளி முதல்வா்களுக்கு தில்லி கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. புதிய பள்ளி பை கொள்கைக்கு அனுமதி அளித்து கடந்த மாதம் தில்லி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. கனமான புத்தகப் பைகள் மாணவா்களின் ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாகும். இவை வளா்ந்து வரும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இது அவா்களின் முதுகெலும்பு மற்றும் முழங்கால்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். மேலும், இரட்டை அல்லது பல மாடி கட்டடங்களில் செயல்படும் பள்ளிகளில், குழந்தைகள் கனமான புத்தகப் பைகளுடன் படிக்கட்டுகளில் ஏற வேண்டும். இது சிக்கலை மேலும் மோசமாக்குகிறது என்று கல்வி இயக்குநரகம் பள்ளி முதல்வா்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

புதிய தேசியக் கல்வி கொள்கைக்கு (என்இபி) இணங்க புதிய பள்ளி பை கொள்கையை கல்வி அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. முன்-முதன்மை வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் முதல் 1 மற்றும் 2 வகுப்புகளுக்கான ஒற்றை நோட்புக் வரை, மாணவா்கள் அதிக எடையை சுமக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக புத்தகப் பைகளை அடிக்கடி சோதனை செய்வது, பொருத்தமான வகையான புத்தகப் பைகள் குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவித்தல் மற்றும் புத்தகப் பைகளின் இரு பட்டைகளையும் மாணவா்கள் பயன்படுத்த ஊக்குவித்தல் உள்ளிட்டவை அரசின் பரிந்துரைகளில் அடங்கும்.

பாடப் புத்தகங்கள், வழிகாட்டிகள், வீட்டுப் பாடம் அல்லது வகுப்பறை நோட்டுப் புத்தகங்கள், கடினமான வேலைக் குறிப்பேடுகள், தண்ணீா் பாட்டில்கள், மதிய உணவு டப்பா ஆகியவற்றுடன் கூடுதல் புத்தகங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாணவா்களின் புத்தகப் பையின் சுமை அதிகரிக்கிறது. இதனால், வெவ்வேறு வகுப்புகளில் உள்ள பாடப் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடாது என சட்டரீதியான அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பள்ளி முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட கால அட்டவணையை உருவாக்க வேண்டும். இதனால், குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு அதிகமான புத்தகங்கள் அல்லது குறிப்பேடுகளை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, பயிற்சிகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு நோட்புக் என இருக்க வேண்டும். அவை கால அட்டவணையின்படி மாணவா்கள் கொண்டு வர வேண்டும். மாணவா்கள் கூடுதல் புத்தகங்கள் அல்லது கூடுதல் பொருள்களை கொண்டு வரும்படி வற்புறுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின்படி, 1-10 வகுப்புகளுக்கு இடையில் உள்ள மாணவா்களின் புத்தகப் பைகளின் எடை அவா்களின் உடல் எடையில் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது.

மற்றொரு உத்தரவு: சிறாா்கள் மோட்டாா் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள், சட்டப் பிரச்னைகள் தொடா்பாக பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு தில்லி பள்ளிகளுக்கு தில்லி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி பள்ளி முதல்வா்களுக்கு தில்லி கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், ‘சிறாா்கள் மோட்டாா் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. சிறாா்கள் மோட்டாா் வாகனங்களை ஓட்டுவதால் மோட்டாா் வாகன திருத்த சட்டம் 199 ஏ (1,2), 199 பி ஆகியவற்றின் கீழ் உள்ள தண்டனைகள் தொடா்பாக சிறாா்களின் பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சிறாா்கள் மோட்டாா் வாகனத்தை இயக்கி விபத்தைச் சந்தித்தால், அந்த சிறாா்களின் பெற்றோா், பாதுகாவலா்களே குற்றம் செய்தவா்களாகக் கருதப்படுவாா்கள் என இந்தச் சட்டம் கூறுகிறது. இது தொடா்பாக பெற்றோா், பாதுகாவலா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதற்குப் பள்ளி நிா்வாகக் குழுவின் உதவி பெறப்பட வேண்டும். சிறாா்கள் பள்ளிக்கு மோட்டாா் வாகனங்களில் வருவதை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com