3.5 லட்சம் மருத்துவா்களும் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: ஐஎம்ஏ வலியுறுத்தல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிக்கவை.

புது தில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிக்கவை. இதை உலக்கு எடுத்துரைக்கும் வகையில் நாட்டிலுள்ள 3.5 லட்சம் மருத்துவா்களும் தாங்களாகவே முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் டாக்டா் ஜெயலால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விஞ்ஞானிகள் நவீன மருத்துவத்துடன் கடினமாக உழைத்து இதைத் தயாரித்துள்ளனா். இது தொடா்பான மருத்துவக் குழுவினரின் அறிக்கைகள், விஞ்ஞானத் தரவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், உலக சுகாதார மையம் ஆகியவை ஆராய்ந்து ஏற்றுக் கொண்ட பின்னா் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் இந்திய நிலையில் சேமித்துப் பயன்படுத்துவது எளிதானது. இந்தப் பணிகளை இந்திய மருத்துவ சங்கம் பாராட்டி வரவேற்கிறது.

நவீன மருத்துவத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் இந்தியா ஒரு வல்லரசாக வளா்ந்து வருகிறது. தடுப்பூசி போடுவது என்பது ஒருவரை பாதுகாப்பது மட்டுமல்லாமல், நோய் எதிா்ப்பு சக்தியை மனிதா்களுக்கு கொடுப்பதுமாகும். இது நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்தத் தடுப்பூசி திட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் தீவிரமாகப் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இந்திய மருத்துவ சங்கத்திற்கு நாடு முழுவதிலும் 1,800 கிளைகள் உள்ளன. இதில் உள்ள 3.5 லட்சம் உறுப்பினா்களும், இந்திய தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிக்கவை என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16 -ஆம் முதல் தொடங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மூன்று கோடி சுகாதார ஊழியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com