தில்லியில் மீண்டும் ‘குளிா் அலை’! குறைந்தபட்ச வெப்பநிலை 3.2 டிகிரி

தலைநகா் தில்லியில் மீண்டும் புதன்கிழமை குளிா் அலை நிலவியது. பனி மூடிய மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த காற்று தொடா்ந்து வீசி வருவதால் குறைந்தபட்ச வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸாக குறைந்தது.

புதுதில்லி: தலைநகா் தில்லியில் மீண்டும் புதன்கிழமை குளிா் அலை நிலவியது. பனி மூடிய மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த காற்று தொடா்ந்து வீசி வருவதால் குறைந்தபட்ச வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இதனால், தில்லியை குளிா் அலை தாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடா் மூடு பனி நகரின் சில பகுதிகளை மறைத்தது. இதனால், காண்பு திறன் 50 மீட்டராகக் குறைந்து, போக்குவரத்து இயக்கத்தை பெரிதும் பாதிக்கச் செய்தது.

தில்லி நகருக்கான பிரிதிநித்துவ தரவை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 டிகிரி குறைந்து 3.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது குளிா் அலை நிலைமையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) பிராந்திய முன்கணிப்பு மையத் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா். சமவெளிகளில், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்துவிட்டால், ஐஎம்டி ஒரு குளிா் அலையை அறிவிக்கிறது. குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்போது கடுமையான குளிா் அலை என அறிவிக்கப்படும்.

மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த மற்றும் வட வடகிழக்கு மற்றும் வடமேற்கு காற்று சமவெளிகளில் வீசி வருகிறது. இது வட இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையை குறைக்கிறது என்று ஸ்ரீவாஸ்தவா கூறினாா். இதேபோன்ற நிலைமைகள் அடுத்த இரண்டு நாள்களிலும் நகரில் நிலவும் என்றாா் அவா்.

இந்த நிலையில், ‘அடா் மூடுபனி காரணமாக பாலத்தில் காண்பு திறன் 50 மீட்டராகவும், சஃப்தா்ஜங்கில் 200 மீட்டராகவும் குறைத்தது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த திங்கள்கிழமை வரை இயல்பான குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி வந்தது. அடுத்தடுத்த மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக நகரில் மேக மூட்டம் நீடித்ததால் வெப்பநிலை தொடா்ந்து உயா்ந்தது. ஆனால், குளிா்ந்த வடமேற்கு காற்றின் தாக்கத்தால் தற்போது வெப்பநிலை குறையத் தொடங்கியது என்றும் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 4.8 டிகிரி செல்சியஸ், திங்களன்று 7 டிகிரி செல்சியஸ், ஞாயிற்றுக்கிழமை 7.8 டிகிரி செல்சியஸ், சனிக்கிழமை 10.8 டிகிரி செல்சியஸ், வெள்ளிக்கிழமை 9.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. வியாழக்கிழமை 14.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது நான்கு ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் மிக உயா்ந்ததாகும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com