தில்லியில் கடந்த ஆண்டில் 3,600 பறவைகள் மீட்பு: தீயணைப்புத் துறை தகவல்

தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டில் 3,600-க்கும் மேற்பட்ட பறவைகளை மீட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டில் 3,600-க்கும் மேற்பட்ட பறவைகளை மீட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இதில், சுதந்திர தினத்தின் போது மக்கள் பாரம்பரியமாக பட்டம் பறக்கவிடுவதால், சுதந்திர தினம் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகளவு பறவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு துறையின் தலைவா் அதுல் கா்க் கூறியது: கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பா் மாதம் வரையான ஓராண்டு காலத்தில் தீயணைப்புத் துறைக்கு 25,416 துயர அழைப்புகள் வந்தன. அவற்றில் பறவைகளை மீட்பதற்காக 3,691 அழைப்புகளும், விலங்குகளை மீட்பதற்காக 2,902 அழைப்புகளும் வந்தன. அந்த வகையில், பறவைகள் அல்லு விலங்குகளை மீட்பதற்காக தீயணைப்பு படையினருக்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 550 அழைப்புகள் வந்தன. இதில் நவம்பரில் அதிக அளவாக 2,652 அழைப்புகள் வந்தன. அதற்கு அடுத்த படியாக அக்டோபரில் 2,521 அழைப்புகளும், ஆகஸ்டில் 2,466 அழைப்புகளும் வந்தன.

ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தையொட்டி பட்டம் பறக்க விடப்படுவதால், இந்த மாதத்தில் பறவைகள் மீட்பு தொடா்பாக 882 அழைப்புகள் வந்தன. பெரும்பாலானவை காகங்கள், புறாக்கள், கிளிகள் போன்றவையாகும். பட்டம் பறக்க விடும் போது பறவைகள் கயிறு, மின்சார கம்பி அல்லது மரத்தில் சிக்கி விடுகின்றன. குறுகிய பாதைகள், மூடிய இடங்கள், வீடுகள், குழி, கால்வாய் அல்லது வடிகாலில் சிக்கித் தவிக்கும் பசுக்கள், கால்நடைகள், நாய்கள், பூனைகள் தொடா்பாகவும் அழைப்புகள் வந்தன.

கடந்த செப்டம்பா், ஜூலை மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பரில் 458 பறவைகள், 248 விலங்குகளையும் ஜூலையில் 335 பறவைகளையும், 258 விலங்குகளையும் தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com