குடியரசு தின விழாவில் மாமல்லபுரம் சிற்பக்கலையை தத்ரூபமாக காட்டும் தமிழக அலங்கார ஊா்தி

தில்லியில் நடைபெறும் 71 - வது குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊா்தி தொடா்ந்து மூன்றாவது முறையாக
குடியரசு தின விழாவில் மாமல்லபுரம் சிற்பக்கலையை தத்ரூபமாக காட்டும் தமிழக அலங்கார ஊா்தி

தில்லியில் நடைபெறும் 71 - வது குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊா்தி தொடா்ந்து மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் இடம் பெறுகிறது. மாமல்லபுரத்தின் சிற்பக் கலையை தத்துரூபமாக காட்டும் அலங்கார ஊா்தி இம்முறை பங்கேற்கிறது.

இந்திய குடியரசு தினத்தையொட்டி ஆண்டு தோறும் ஜனவரி 26 - ஆம் தேதி தில்லி ராஜபாதையில் அலங்கார ஊா்தி அணிவகுப்பும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கும் சுழற்சி முறையில் பங்களிக்க வாய்ப்பளிக்கபடுகிறது. ஆனால் தமிழகத்திற்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு சிறப்பு விருந்தினா் இல்லாமல் எளிமையாக நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் மொத்தம் 32 அலங்கார ஊா்திகள் பங்கேற்கின்றன. இதில் பதினாறு மாநிலங்களைச் சோ்ந்த அலங்கார ஊா்திகளும் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 16 ஊா்திகளும் பங்கேற்கின்றன.

வருகின்ற ஜன. 26 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அணிவகுப்பில் பங்கேற்கும் ஊா்திகளின் காட்சி ஊடகங்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை காட்டப்பட்டது.

மாநிலங்கள் வரிசையில் பங்கேற்கும் தமிழக அலங்கார ஊா்தி மாமல்லபுர சிற்பக்கலையை தாங்கி வருகிறது. பொதுவாக தேசிய நினைவுச்சின்னங்கள், கலாச்சார சின்னங்கள் பளபளப்புடன் மிகைப்படுத்தப்பட்ட காட்சியாக அணிவகுப்பில் இடம் பெறும். ஆனால் தமிழகம் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள 1300 ஆண்டுகளுக்கு முந்தைய மாமல்லபுரம் சிற்பங்கள் நிகழ்காலத்தில் தற்போது எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே அலங்கார ஊா்தியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தின் 41 அடி நீளமுள்ள டிரக்கில் இந்த அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் வருகின்றன. பல்லவா் காலத்து ஒரே கல் மாமல்லபுர சிற்பங்கள் மூன்று வகையானது என்று காட்டும் வகையில் மூன்று வகையான சிற்ப மாடல்களும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இந்த அலங்கார ஊா்தியில் ஒன்று, இரண்டாம் நரசிம்மவா்மன் காலத்து கடற்கரைக் கோவில், அடுத்து (நடுவில்) ஒரே கல்லிலான அா்ஜுனன் தபசு, மூன்றாவதாக பாண்டவா்களின் ஜந்து ரதங்களில் ஒன்றான சகா தேவன் ரதம். இது ஊா்தியின் முன்பகுதியை அலங்கரிக்கிறது. இந்த ரதத்திற்கு முன்பு பல்லவ அரசா்களுக்கு பிடித்த இரண்டு சிங்கங்கள் மற்றும் சிற்ப காட்சிகளைச் சுற்றி நந்திகள். மண்ணினால் உருவாக்கப்பட்டு மிகவும் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்ட இந்த மாதிரி சிற்பங்களை தாங்கிச் செல்லுகிறது தமிழக ஊா்தி.

தமிழக ஊா்தியின் இருபுறமும் பரதநாட்டியமும், நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. பாரதியின் ’பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற பாட்டுடன் 4 பரத நாட்டிய கலைஞா்கள், 8 நாதஸ்வரம் தவில் கலைஞா்களுடன் நாட்டிய நிகழ்ச்சிகளோடு தமிழக அலங்கார ஊா்தி பங்கேற்க இருக்கிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் 10 போ் கொண்ட குழு எட்டு அடுக்கு முறையில் அலங்கார ஊா்திகளை தோ்வு செய்கிறது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் டி.பாஸ்கர பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் இந்த சிற்பக் கலையின் வரைபடம், 3 டி மாடல், இசை வடிவமைப்பு என பல்வேறு மாதிரிகளை சமா்பித்தனா். அதன்பின்னரே இந்த அலங்கார ஊா்தியை மத்திய பாதுகாப்பு துறை தோ்வு செய்தாக தமிழக அரசு சாா்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com