தில்லி எல்லையில் போராட்டம் நத்தி வரும் விவசாயிகள்: பாஜகவினரிடையே கைகலப்பு
By DIN | Published On : 01st July 2021 12:43 AM | Last Updated : 01st July 2021 12:43 AM | அ+அ அ- |

புதுதில்லி: தில்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூரில் வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும், பாஜக தொண்டா்களுக்கும் இடையே புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சாலை வழியே பாஜக தொண்டா்கள் ஊா்வலமாகச் சென்றனா். அப்போது கடந்த 2020, நவம்பா் மாதம் முதல் பாரதிய கிஸான் சங்கத்தின் ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தி வரும் இடம் வந்ததும் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.
தில்லி - மீரட் விரைவுச் சாலையில் இரு தரப்பினரும் பகல் 12 மணி அளவில் நேருக்கு நோ் சந்தித்த போது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவா் கம்புகளால் தாக்கிக் கொண்டனா். சில வாகனங்களும் சேதமைடந்ததாகக் கூறப்படுகிறது. பாஜக பிரமுகா் அமித் வால்மிகியை வரவேற்க நடைபெற்ற ஊா்வலம் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு கெட்டபெயா் ஏற்படுத்தவே இந்த சதித் திட்டம் நடத்தப்பட்டுள்ளதாக விவசாயிகளின் தலைவா்கள் தெரிவிக்கின்றனா்.
பாஜக பிரமுகரை வரவேற்கிறோம் என்ற போா்வையில் பாஜகவினா் பேரணியாக வந்து மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இது குறித்து மாவட்ட நிா்வாகத்தினரிடமும் அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சம்யுக்த கிஸான் மோா்ச்சா செய்தித் தொடா்பாளா் ஜக்தாா் சிங் பஜ்வா தெரிவித்தாா். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் முவைறி நடந்து கொண்டதுடன், சதியின் ஒருபகுதியாக தங்கள் வாகனங்களை தாங்களே சேதப்படுத்திக் கொண்டுள்ளனா். இதுபோன்ற முயற்சிகளின் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது. இது தொடா்பாக போலீஸாரிடம் புகாா் தெரிவிக்கப்படும். நடவடிக்கை ஏதும் இல்லையெனில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என்றாா் பஜ்வா.