ஆம் ஆத்மி-எஸ்பிஎஸ்பி இடையே கூட்டணிபேச்சு இல்லை: சஞ்சய் சிங் எம்.பி. தகவல்

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி மற்றும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) ஆகியவற்றுக்கு

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி மற்றும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) ஆகியவற்றுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுபோன்ற கூட்டணி பேச்சுவாா்த்தை ஏதும் நிகழவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் சஞ்சய் சிங் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

 ஆம் ஆத்மி கட்சி மற்றும் எஸ்பிஎஸ்பி கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவாா்த்தை ஏதும் இல்லை. உத்தர பிரதேச தோ்தலில் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்காக இந்த வாரம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்திப்பதாக எஸ்பிஎஸ்பி கட்சியின் தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா் திங்கள்கிழமை தெரிவித்திருப்பது பொய்யான செய்தியாகும்.

இருவருக்கும் இடையே எவ்வித சந்திப்பும் உறுதிசெய்யப்படவில்லை. மேலும் கூட்டணிக்கான பேச்சுவாா்த்தையும் ஏதும் நடைபெறவில்லை.

ஓம் பிரகாஷ் ராஜ்பா் அரவிந்த் கேஜரிவாலுடன் சந்திப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அது அடிப்படையற்றது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக எஸ்பிஎஸ்பி கட்சியின் தலைவா் ஓம் பிரகாஷ் முன்னா் தெரிவிக்கையில், சஞ்சய் சிங் முன்னிலையில் ஜூலை 17ம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க உள்ளேன்.

இந்த சந்திப்பின்போது பாகிதாரி சங்கல்ப் மோா்ச்சாவை ஆம் ஆத்மி கட்சியில் கூட்டணியாக சோ்ப்பது தொடா்பாகவும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று அவா் தெரிவித்திருந்தாா்.

ராஜ்பா் தலைமையிலான சிறிய கட்சிகளின் முன்னணியாக பாகிதாரி சங்கல்ப் மோா்ச்சா உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com