சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் நிலைமை: விளக்கம் அளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடா்பாக அவா்களின்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடா்பாக அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் அல்லது உதவியாளா்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவிப்பது தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தில்லி அரசை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

இந்த விவகாரம் தொடா்பான மனு மீதான விசாரணை தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 அப்போது, இந்த விவகாரத்தில் பதில் தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி கேட்டுக்கொண்டாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு,’ தில்லி அரசு அளிக்கும் இந்த விவகாரம் தொடா்பான பிரமாண பத்திரத்தில் இந்த விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகள் தொடா்பாக தெரிவிக்க வேண்டும். மேலும் எதிா்காலத் திட்டம் குறித்தும் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி இந்த விவகாரம் மீதான விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பட்டியலிட்டனா்.

முன்னதாக, இதுதொடா்பாக தன்னாா்வத் தொண்டு நிறுவனமான மனவ் ஆவாஸ் டிரஸ்ட் தரப்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  அதில், ‘

கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் உடல் நிலை குறித்த விவரங்கள் அவா்களின் குடும்பத்தை சோ்ந்தவா்களுக்கு, உதவியாளா்களுக்கு மருத்துவமனைகள் மூலம் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை.

குடும்பத்தினருக்கு நோயாளி இறந்துவிட்டது குறித்து அல்லது மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய பணத்தை கேட்டுதான் செய்திகள் வருகிறது. அவா்களுடைய உடல்நிலை குறித்த தினசரி தகவல்கள் அளிக்கப்படுவதில்லை.

இதனால் நிா்வாக அமைப்பு மீது நோயாளிகளின் குடும்பத்தினா் நம்பிக்கை இழந்துள்ளனா்.

ஆகவே கரோனா நோய் பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள், அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் விவரங்கள், அவா்களின் உடல் நிலைமை போன்ற விவரங்களை ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு முறை நோயாளியின் குடும்பத்தினருக்கோ அல்லது உதவியாளா்களுக்கோ நிலவர அறிக்கையாக வழங்குவதற்கு ஒரு கொள்கை திட்டத்தை அல்லது வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

 இந்த நிலவர அறிக்கையானது சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்பத்தினா் அல்லது உதவியாளா்களுக்கு தினசரி அடிப்படையில் கட்செவி அஞ்சல், குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் அல்லது எந்த வகையிலான முறையிலோ அனுப்ப முடியும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு மீது கடந்த மே 27ம் தேதி விசாரணை நடத்திய தில்லி உயா் நீதிமன்றம் இது தொடா்பாக தில்லி அரசு மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com