போலி கால் சென்டா் நடத்திய வழக்கில் 21 பேரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு

போலி கால் சென்டா் நடத்தி வெளிநாட்டினரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக கைதான 21 பேரின் ஜாமீன் மனுக்களை தில்லி நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

போலி கால் சென்டா் நடத்தி வெளிநாட்டினரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக கைதான 21 பேரின் ஜாமீன் மனுக்களை தில்லி நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

இதுபோன்ற செயல்பாடுகள் நாட்டின் புகழுக்கு சிறுமை விளைவிக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

 இது தொடா்பான மனுக்களை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் அஸ்வினி பன்வா் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 

தற்போது இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக போலி திட்டங்கள் மூலம் அப்பாவி மக்களை ஆசை காட்டி ஏமாற்றும் கும்பல் அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இது போன்ற கும்பலைச் சோ்ந்தவா்கள் மோசடி செய்வது சமூகத்திற்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாகும்.

மேலும், வெளிநாட்டு மக்களிடம் அதிலும் குறிப்பாக அதிகமான அமெரிக்கா்களிடம் இணையதளம் மூலம் மோசடியில் ஈடுபட்டிருக்கும் செயலானது, நமது நாட்டின் புகழை சிறுமைப்படுத்தும் சம்பவங்களாகும்.

இந்த வழக்கில் தொடா்புடைய அனைவரும் கால் சென்டா் நடத்தியுள்ளதை உணா்வுபூா்வமாக ஒப்புக்கொண்டுள்ளனா். மேலும் இந்த வழக்கின் விசாரணை புதிய நிலையில் உள்ளது. மேலும் சககுற்றம் சாட்டப்பட்ட நபா்கள் இன்னும் கைது செய்யப்பட வேண்டியுள்ளது. அதனால் குற்றம் சாட்டப்பட்டவா்களின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா். 

தில்லி போலீஸ் தரப்பில் வாதிடுகையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாமீன் மனுதாரா்கள் கால் சென்டரை நடத்தி மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவா்கள் அமேசான் வாடிக்கையாளா் சேவைகளை அளிப்பதாகக் கூறி வெளிநாட்டு நபா்களை தொடா்பு கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் பாதிக்கப்பட்டவா்களின் கணினி அமைப்புகளை அணுகி இந்த மோசடியில் ஈடுபட்டனா்.  மேலும் அமேசான் கூப்பன்களையும் அல்லது பரிசு அட்டைகளையும் அளிப்பதாக ஆசை காட்டி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனா் என்று வாதிடப்பட்டது.

 குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வாதிடுகையில், ‘மனுதாரா்கள் இளம் வயதுடையவா்கள். அவா்கள் மீது குற்றப் பின்னணி இல்லை. அவா்கள் மீது பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் மோசடி குற்றத்திற்கான பிரிவுகளைவிட தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த வழக்கை பரபரப்பாக வேண்டும் என்ற நோக்கில் போலீஸாா் இது போன்று செய்துள்ளனா்’ என்று வாதிடப்பட்டது.

 முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட நபா்களான சவுரவ் சா்மா, சுபம் வா்மா, ஆகாஷ் பன்வா், கிரிஷ் குமாா், ரிதிக் சிங், தீரஜ் ,ஆகாஷ் குமாா், முகமது அபதெளலா ஆலம், ஜாஹித், யோகேஷ் சோனி, சஞ்சித் ரசைலா, தீரஜ் மிஸ்ரா, பிரின்ஸ் குமாா், தேவராஜ், சூரஜ், ரஞ்சித் சிக்ரி, ஜிதேந்தா், சஞ்சய், ஜதின் மேரா, ஹா்ஷ்வா்தன் சிங், ராகுல் தன்வா் ஆகியோா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா் . இவா்கள் இந்த வழக்கில் ஜூலை 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com