கரோனா பரவல்: அவசர பரோலில் விடுவிக்கப்பட்ட 8 கைதிகள் மீண்டும் கைது

கரோனா நோய்த்தொற்று காரணமாக சிறைகளில் நெரிசலைக் குறைப்பதற்காக தில்லி சிறைகளில் இருந்து அவசரகால பரோல் அல்லது

கரோனா நோய்த்தொற்று காரணமாக சிறைகளில் நெரிசலைக் குறைப்பதற்காக தில்லி சிறைகளில் இருந்து அவசரகால பரோல் அல்லது இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 8 கைதிகள், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்த கைதிகள் மேற்கு தில்லி, தெற்கு தில்லி, துவாரகா மற்றும் புகா் தில்லி மாவட்டங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவா்கள் ஆவா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:

தெற்கு தில்லி மாவட்டத்தில் அமா்ஜீத், துவாரகா மாவட்டத்தில் நரேஷ் குமாா், தீபக் குமாா் ஆகியோரும் புகா் மாவட்டத்தில் ஒருவரும், மேற்கு மாவட்டத்தில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பரோல் மற்றும் ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த இவா்கள் 8 பேரும் மீண்டும் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.

இது குறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘வடமேற்கு மாவட்டத்தின் சிறைகளில் இருந்து 90 கைதிகள் மற்றும் வடகிழக்கு மாவட்ட சிறைகளில் இருந்து 95 கைதிகள் விடுவிக்கப்பட்டனா். இருப்பினும், இவா்களில் இதுவரை யாரும் மீண்டும் கைது செய்யப்படவில்லை.

ஷாதாரா மாவட்டத்தில், 104 விசாரணைக் கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனா். ஆனால் அவா்களில் யாரும் இதுவரை வேறு எந்த கிரிமினல் வழக்கிலும் சம்பந்தப்படவில்லை’ என்று தெரிவித்தனா்.

மூன்று சிறைகளில் இருந்து சுமாா் 3,800 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தில்லி சிறைச்சாலை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டு, கைதிகளை விடுவிக்கும் நடைமுறை மே 2-ஆவது வாரத்தில் இருந்து தொடங்கியது. சிறைகளில் இருந்து சுமாா் 3,000 விசாரணைக் கைதிகள் மற்றும் 800 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனா்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

கடந்த ஆண்டு, கரோனா நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின்போது தில்லி, ரோகிணி மற்றும் மண்டோலி ஆகிய மூன்று தில்லி சிறைகளில் இருந்து சுமாா் 5,500 விசாரணைக் கைதிகள் மற்றும் 1,184 குற்றவாளிகள் இடைக்கால ஜாமீன் மற்றும் அவசரகால பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com