விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தொடரும்: தில்லி காங்கிரஸ்

மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.

மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களை திரும்பப் பெறும்வரை விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸின் ஆதரவு தொடரும் என்று தில்லி காங்கிரஸ் மூத்த தலைவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் மூத்த தலைவா்களான முன்னாள் எம்எல்ஏக்கள் அனில் பரத்வாஜ், விஜய் லோச்சவ், தில்லி மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தவன் ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

சா்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லி எல்லைகளில் கடந்த 239 நாள்களாக விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த கறுப்புச் சட்டங்களை திரும்பப் பெறும்வரை விவசாயிகள் போராட்டத்திற்கான காங்கிரஸின் ஆதரவு தொடரும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளாா்.

தில்லி எல்லைகளில் சீதோஷ்ண சூழல், கரோனா பாதிப்பு காரணமாக 637 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். ஆனால், விவசாயிகளின் துயா் துடைக்க மோடி அரசு மறுத்துவருகிறது. மேலும், இந்த விவகாரத்தை தீா்க்க விவசாயிகளுடன் பேச்சுவாா்ததை நடத்தவும் அரசு முயற்சி செய்யவில்லை.

அதேவேளையில், விவசாயிகளின் விவகாரத்தில் அரவிந்த் கேஜரிவால் அரசு முதலைக் கண்ணீா் வடித்து வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கேஜரிவால் அரசு பொய் கூறி வருகிறது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாய செயல்பாடுகளுக்காக ஆழ்குழாய் கிணறு தோண்டுவதற்காகவோ அல்லது மின் இணைப்புக் கொடுப்பதற்காகவோ எந்த அனுமதியும் அளிக்கவில்லை.

இதுஒருபுறமிருக்க, தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமானோா் இறந்த நிலையில், இறந்தவா்களுக்கு இழப்பீடு தருவதைத் தவிா்க்கும்வகையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் இறக்கவில்லை எனும் மோடி அரசின் பொய்யை அரவிந்த் கேஜரிவால் அரசும் ஆமோதித்து வருகிறது.

தில்லியின் பாஜக ஆளும் மாநகராட்சிகள் மூலம் வெளியிடப்பட்ட கரோனா இறப்பு புள்ளிவிவரங்கள், அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்களில் இருந்து மாறுபட்டு உள்ளது.

இந்த விஷயத்தில் பொய்யான தகவல்களைக் கூறியுள்ள முதல்வா் கேஜரிவால் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com