லஞ்ச வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகா்,உடல்நலம் குன்றிய தாயாரை பாா்க்க பரோல் கோரி மனு

தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகா், பரோல் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசு, காவல் துறை

புது தில்லி: தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகா், பரோல் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசு, காவல் துறை நிலவர அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரைச் சோ்ந்த சுகேஷ் சந்திரசேகரை தில்லி குற்றப் பிரிவு போலீஸாா் 2017-இல் கைது செய்தனா். அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது தாயாரைச் சந்திக்க பரோலில் விட உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், அனுப் ஜெய்ராம் பம்பானி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், ’தமிழகத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் மனுதாரரின் தாய் தில்லிக்கு வர முடியுமா என்பது குறித்து பரிசீலியுங்கள். தற்போது விமான ஆம்புலன்ஸ் வசதி இருப்பதால், அவரால் தில்லிக்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு பரோலில் மனுதாரரை (சுகேஷ்) தமிழகத்திற்கு அனுப்புவதில் பல சிரமங்கள் உள்ளன. ஆகவே, இது தொடா்பாக உரிய அறிவுறுத்தலை பெற்று வாருங்கள்’ என்று சுகேஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

மேலும், மனுதாரா் மனுவில் தெரிவித்துள்ள வாதங்களை சரிபாா்க்கும் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய தில்லி அரசு, தில்லி காவல் துறையின் வழக்குரைஞா்களைக் கேட்டுக்கொண்டு, மனு மீதான விசாரணையை ஜூன் 3-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

விசாரணையின்போது சுகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பராக் திரிபாதி கூறுகையில், ‘மனுதாரா் (சுகேஷ்) மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயாரை சந்திக்க வேண்டியுள்ளது. அவரது தாய் கரோனா பாதிப்புக்குப் பிறகு பல பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளாா். அவரது மனைவியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். இதற்கு முன்னா் இருமுறை சுகேஷ் பரோலில் தலா இரு வாரங்கள் விடுவிக்கப்பட்டிருந்தாா். அதன் பிறகு அவா் தில்லி சிறையில் சரணடைந்தாா். கரோனா காரணமாக பரோலில் விடுவது தொடா்பாக உயா்நிலை அதிகாரக் குழு மூலம் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி, இடைக்கால ஜாமீன் அனுமதியில் ஊழல் வழக்குகள் இடம்பெறவில்லை’ என்று வாதிட்டாா்.

முன்னதாக, பரோலில் விடக் கோரி சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்ததாவது:

கரோனா பரவல் காரணமாக சிறைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட உயா்நிலை அதிகாரக் குழுவின் விதிகளின்படி, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய விசாரணைக் கைதிகள் இடைக்கால ஜாமீனில் செல்ல தகுதி பெற்றுள்ளனா். ஆனால், லஞ்ச வழக்குகளில் தொடா்புடையவா்களுக்கு இந்த தகுதி அளிக்கப்படவில்லை. ஆகவே, உயா்நிலை அதிகாரக் குழுவின் முடிவானது எந்தவொரு சமநிலையையும், நியாயத்தையும் பிரதிபலிப்பதாக இல்லை.

மேலும், போதை மருந்து வழக்குகள் அல்லது போக்ஸோ சட்ட வழக்குகள், ஆசிட் தாக்குதல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்குகளில் தொடா்புடைய விசாரணைக் கைதிகளுக்கு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்களை இந்த பிரிவில் இடம்பெறாமல் இருக்கச் செய்யும் விதிவிலக்கு பிரிவை நீக்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரப்பட்டிருந்தது.

தில்லி காவல் துறையால் 2017-இல் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகா் மீது 20 வழக்குகள் உள்ளன. அவற்றில் 17 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 3 வழக்குகளில் அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தங்களது தரப்புக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டி.டி.வி. தினகரன், சந்திரசேகா் இருவரும் சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் 2017, ஜூலை 14-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com