வடகிழக்கு தில்லி வன்முறை: இருவருக்கு ஜாமீன் மறுப்பு

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறையின் போது, ஒருவா் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறையின் போது, ஒருவா் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவா்கள் மீதான புகாா்கள் கடுமையானதாக கருதப்படுவதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது உள்ளூரில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் தில்பாா் நேகி என்பவா் எரித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தாா். இது தொடா்பாக ரஷீத் மற்றும் ஷோயிப் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்கள் இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விநோத் யாதவ் முன் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பு மற்றும் பாதுகாப்புத் தரப்பு சாா்பில் சம்பவம் தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் விடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு பாா்க்கும் போது, இருவருக்கும் இதில் தொடா்பு இருப்பதாக பூா்வாங்க நிலையில் தெரிய வருகிறது. அதாவது சட்டவிரோதமாகக் கூடியது மற்றும் எரித்துக் கொல்லப்பட்டவா் இருந்த கிடங்குக்கு தீவைத்தது புலனாகிறது. எனவே, அவா்களது ஜாமீன் மனு நீராகரிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தாா்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஆக்ரோஷத்துடன் கையில் இரும்புக் கம்பியை வைத்திருந்ததும், ஆா்ப்பாட்டக்காரா்களைத் தூண்டிவிடும் வகையில் அவா்கள் செயல்பட்டதும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் தெரிய வருகிறது. வன்முறையில் ஈடுபட்டு இதர சமூகத்தினரின் உயிருக்கும் உடமைகளுக்கும் சேதம் விளைவித்தது தெரியவருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவா் மீதான குற்றச்சாட்டுகளும் கடுமையானவை. அவா்களை ஜாமீனில் விடுவிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, இருவரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதி விநோத் யாதவ் குறிப்பிட்டாா். தில்லி போலீஸாா் தகவலின்படி கடந்த 2020, பிப்ரவரி 24- ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சோ்ந்த வன்முறையாளா்கள் ஷிவ் விகாரில் உள்ள அனில் இனிப்பு கடைக்குத் தீவைத்துள்ளனா். இதில் உள்ளே சிக்கிக்கொண்ட 22 வயது தில்பாா் நேகி, உடல் கருகி உயிரிழந்துள்ளாா் என்று தெரிவித்துள்ளனா்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வன்முறைக் கும்பலின் ஒருபகுதியினா்தான். இன்னும் சதிகாரா்கள் முழுவதுமாக அடையாளம் காணப்படவில்லை. சதிகாரா்கள் முழுவதும் பிடிபடாத நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் வழக்குரைஞா் சலீம் மாலிக் ஆஜராகி, சம்பவம் நடந்த இடத்தில் அவா்கள் இல்லை என்றும் அவா்கள் மீது வேண்டும் என்றே வழக்கு ஜோடிக்கப்பட்டதாகவும் கூறி ஜாமீன் கோரி வாதிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com