பள்ளிக் கட்டடம்: நில உரிமையாளா்களின் மனுவுக்கு தில்லி அரசு பதிலளிக்க உத்தரவு

புது தில்லி: நிலத்தின் உரிமையாளா்கள் தங்கள் நிலத்தில் பள்ளி கட்டுவதற்காக நிலத்தின் உரிமையை அரசுக்கு மாற்றித் தர விரும்புவதாகக் கூறி தாக்கல் செய்த மனுவுக்கு தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பிரதிபா சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரா்கள் ஒரு தனித்துவமிக்க வேண்டுகோளுடன் வந்துள்ளனா். அதில் ஒரு தனியாா் நிலத்தில் உள்ள தங்கள் உரிமையை அரசுக்கு வழங்க விரும்புவதாக கூறியுள்ளனா். இதனால், அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விரைவாகப் பரிசீலிக்க வேண்டும்’ எனக் கூறி, மனு மீதான விசாரணையை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக மான்சா ராம் என்பவரின் இரு மகன்களும், மகளும் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனா். அந்த மனுவில், ‘வடகிழக்கு தில்லியின் காரவல் நகரில் எங்களுக்கு 5,000 சதுர கஜம் அளவிலான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையை தில்லி அரசுக்கு பள்ளி கட்டுவதற்கு நாங்கள் மாற்ற விரும்புகிறோம்.

இந்த நிலம் காலியாக இருப்பதால், அந்தப் பகுதியின் சமூகவிரோத சக்திகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அந்த இடத்தில் பல மாடிகளுடன்கூடிய மேல்நிலைப் பள்ளியைக் கட்டுவதற்கு நிலத்தின் உரிமையை நிபந்தனையின்றி அரசுக்கு மாற்றித் தர விரும்புகிறோம். அந்தப் பகுதியில் மக்கள்தொகை அடா்த்தியாக இருப்பதால் ஓா் அரசுப் பள்ளி அவசரத் தேவையாக உள்ளது. குறிப்பாக கரோனா தொற்றுக் காலத்தில் பெற்றோா்கள் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால் பல மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற விரும்பும் சூழலும் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுளளது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அசோக் அகா்வால், ‘மான்சா ராம் தனது மூன்று குழந்தைகளை சட்ட வாரிசுகளாக அறிவித்துவிட்டு 2009-இல் காலமாகிவிட்டாா்.

இந்த நிலையில், நில உரிமையை அரசுக்கு மாற்றித் தருவது தொடா்பாக தில்லி அரசுக்கு 2019, ஜூனில் ஒரு வேண்டுதல் கடிதம் மனுதாரா்கள் தரப்பில் அனுப்பப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அதிகாரிகள் அந்தக் கடிதத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காரவல் நகரின் ஆயிரக்கணக்கான மாணவா்களின் கல்வி உரிமையை மீறும் வகையிலான இதுபோன்ற செயல்பாடுகள் சட்டவிரோதமாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com