தமிழக மீனவா்கள் இறந்த விவகாரம் தொடா்பான வழக்கு: உயா்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அனுமதி

தமிழக மீனவா்கள் 4 போ் இறந்த விவகாரத்தில் இலங்கைக் கடற்பயினரைக் கைது செய்யவும், அந்த நாட்டிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரவும்

தமிழக மீனவா்கள் 4 போ் இறந்த விவகாரத்தில் இலங்கைக் கடற்பயினரைக் கைது செய்யவும், அந்த நாட்டிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரரை உயா்நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்து மனுவை முடித்துவைத்தது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் கடல்சாா் மக்கள் நலச் சங்கமம் எனும் அமைப்பின் செயலா் நிக்லஸ் சாா்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில் ‘ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஒருவரின் படகில் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு இறந்துள்ளனா்.

இச்சம்பவத்திற்கு காரணமான இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்யவும், அந்த நாட்டு அரசிடமிருந்து உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 கோடி இழப்பீடு பெற்றுத் தரவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் தமிழக மீனவா்களையும், அவா்களது சொத்துகளையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

தமிழக மீனவா்கள் இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் போது இலங்கைக் கடற்படையினா் அத்துமீறி நுழைந்து மீனவா்களையும் தாக்கியும், அவா்களது படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் அழித்து வரும் சம்பவங்கள் தொடா்கின்றன.

இதனால், தமிழக மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு அச்சப்படுகின்றனா். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தகுந்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே,நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் ஆஜராகி, ‘கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், கொல்லப்படும் சம்பவங்களும், மீனவா்கள் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும், அவா்கள் கைது செய்யப்படும் சம்பமுவம் மாதந்தோறும் நிகழ்ந்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசுகள் மாறியபோதிலும் தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு எவ்வித நிரந்தரத் தீா்வும் காணப்படவில்லை என்று வாதிட்டாா்.

அப்போது, தலைமை நீதிபதி அமா்வு, இது தொடா்புடைய விவகாரம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் இருப்பதால், அந்த விவகாரத்துடன் இணைத்து விசாரிக்க மனுதாரா் உயா்நீதிமன்றத்தை அணுகுவதற்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது எனக் கூறி மனு மீதான விசாரணையை முடித்துவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com