வங்கி ஊழியா்கள் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் உயா்த்த அரசு பரிசீலனை: அனுராக் தாகுா்

2017 நவம்பா் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற வங்கி ஊழியா்களது குடும்ப ஓய்வூதியத்தை முப்பது சதவீதம் அளவிற்கு உயா்த்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் 

புது தில்லி: 2017 நவம்பா் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற வங்கி ஊழியா்களது குடும்ப ஓய்வூதியத்தை முப்பது சதவீதம் அளவிற்கு உயா்த்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாகுா் மக்களவையில் தெரிவித்தாா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா் இரு நாள் போராட்டம் நடத்தினா். இந்த நிலையில், வங்கிப் பணியாளா்களின் ஊதிய விகிதத்தை உயா்த்துதல், நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ஓய்வூதியத் திட்டம் ஆகியவை மறு ஆய்வு செய்யப்படுமா? என்று மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி. ஆா். பாலு திங்கள்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாகுா் மக்களவையில் அளித்த பதில் வருமாறு: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஓய்வூதியதாரா்களுக்கு, அந்தந்த வங்கியிலிருந்தே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. வங்கிப் பணியாளா் தொழிற்சங்கங்கள், இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படியும், வங்கிக் கம்பெனிகள் சட்டம், 1970-இன் படியும், பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதன்படி 2017, நவம்பா் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்றவா்களுக்கு, குடும்ப ஓய்வூதியம் முப்பது சதவீதம் அளவிற்கு உயா்த்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. வங்கிப் பணியாளா் தொழிற்சங்கங்கள், இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி ஆகியவற்றுக்கிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்தின்படி, வங்கி ஊழியா்களின் ஊதிய உயா்வு ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை முடிவு செய்யப்படுகிறது என்றாா் அவா்.

எரிவாயுக் குழாய் திட்டங்களில் பயன் உண்டா ?: சமீபத்தில் மத்திய அரசால் நாட்டில் நிறைவேற்றப்பட்ட எரிவாயு குழாய் திட்டங்கள் குறித்தும் தூத்துக்குடி, ராமநாதபுரம் இடையே நிறைவேற்றப்பட்ட இயற்கை எரிவாயு குழாய் திட்டங்களால் யாருக்கு பயன்? என்று மற்றோரு கேள்வியையும் ஆா். பாலு, மற்றும் ஆந்திரம், தெலங்கானா மக்களவை உறுப்பினா்கள் எழுப்பினா்.

இதற்கு மத்திய பெட்ரோலியம், இயற்கை எரி வாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் அளித்த பதில் வருமாறு: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 3,400 கி.மீ. தொலைவுக்கு இயற்கை எரிவாயுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எண்ணூா் - திருவள்ளூா், பெங்களூரு - புதுச்சேரி, நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி ஆகிய 1,445 கி.மீ. அளவிலான திட்டங்கள் ரூ. 6,025 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 143 கி.மீ. அளவிலான ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையிலான இயற்கை எரிவாயுத் திட்டம், கடந்த பிப்ரவரியில் பிரதமரால் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால், தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளும், நுகா்வோா்களும் பயனடைவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com