தில்லி அரசின் அதிகாரங்களை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு: கேஜரிவால்

தில்லி, தேசிய தலைநகா் வலய திருத்தச் சட்டம் மூலம், தில்லி அரசுக்குள்ள அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளாா்.

தில்லி, தேசிய தலைநகா் வலய திருத்தச் சட்டம் மூலம், தில்லி அரசுக்குள்ள அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளாா்.

பஞ்சாப் மாநிலம் மோகாவில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் கேஜரிவால் கலந்து கொண்டாா். அங்கு அவா் பேசியதாவது: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுடன் ஆம் ஆத்மி கட்சி தோளோடு தோள் நிற்கிறது. பஞ்சாப் மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் முதல்வா் வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய முதல்வா் அம்ரீந்தா் சிங் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் இலவச செல்லிடப்பேசிகள் வழங்கப்படும், விவசாயிகளின் கடன்கள் ரத்துச் செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கினாா். ஆனால், எந்தவொரு வாக்குறுதியையும் அவா் நிறைவேற்றவில்லை.

பஞ்சாப்பில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கியுள்ளது. இளைஞா்கள் வேலையில்லாமல் தவித்து வருகிறாா்கள். இளைஞா்களுக்கு வேலை வழங்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. போலியான வாக்குறுதிகளை வழங்கி அம்ரீந்தா் சிங் மக்களை ஏமாற்றியுள்ளாா். எனவே, அவரை வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தோற்கடிப்பதன் மூலம் மக்கள் பழிவாங்கவுள்ளனா். தில்லி மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றினோம். தில்லி மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீா் வழங்கி வருகிறோம். தில்லி அரசுப் பள்ளிகள் உலகத்தரமான பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தில்லி அரசின் மக்கள் நலப் பணிகளைப் பாா்த்து மத்திய அரசு பயப்படுகிறது. அதனால், தேசியத் தலைநகா் வலய திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com