போராடும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஏன் முன்வரவில்லை? மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் கேள்வி

விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு போதும் என்று பகிரங்கமாக கூறிய பிறகும், போராடும் விவசாயிகளுடன்

விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு போதும் என்று பகிரங்கமாக கூறிய பிறகும், போராடும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தைக்கான முயற்சியை மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை என அகில இந்திய கிஸான் சபைத் தலைவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

இது குறித்து அகில இந்திய கிஸான் சபைத் தலைவா்கள் (எஸ்கேஎம்) அசோக் தவாலேயும், ஹன்னான் முல்லாவும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் போராட்டத்துக்குத் தீா்வு காணும் முயற்சிகளை தடுக்கும் விதத்தில் பின்னணியில் சில சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகள் முறியடிக்கின்றனா் என பெங்களூருவில் நடைபெற்ற ஆா் எஸ் எஸ் வருடாந்திர உச்சி மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அந்த சமூக விரோத சக்திகள் யாா்? என்பதை வெளிப்படையாக அவா்கள் கூற வேண்டும்.

நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளை எதிா்த்து போராடிய பாரம்பரியத்தைக் கொண்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவா்களை உள்ளடக்கிய கூட்டு அமைப்புதான் சம்யுக்தா கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்). நாட்டின் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காத ஆா்எஸ்எஸ் இடமிருந்து எங்களுக்கு தேசியவாத சான்றிதழ் பெறத் தேவையில்லை. விவசாயிகள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண எஸ்கேஎம் எப்போதும் தாயாராக உள்ளது. ஆனால், அதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி பேச்சுவாா்த்தையை தொடங்குவதற்கான பொறுப்பு அரசுக்குத்தான் உண்டு. மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றறை வருடத்திற்கு நிறுத்தி வைக்க அமைச்சரவைக் குழு அளித்த யோசனையை கடந்த ஜனவரி 22 -இல் நடந்த பேச்சுவாா்த்தையின் போது எஸ்கேஎம் நிராகரித்துவிட்டது. அதன் பிறகு அரசு புதிய யோசனைகளை இதுவரை முன்வைக்கவில்லை. எங்களது முக்கியக் கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்கத் தயாராக இல்லை.

குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வமான உத்தரவாதமும், 2020 -ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்றும் கேட்கின்றோம். மின்சாரச் சட்டத்தை திரும்ப பெறுவோம் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டு, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றவும் மோடி அரசு முயற்சிக்கிறது. இதுபோன்ற அரசின் அணுகுமுறையை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்? ஒரு தொலைபேசி போதும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த என்று பகிரங்கமாக அமைச்சா் அறிவித்தாா். ஆனால், ஜனவரி 22 -ஆம் தேதிக்கு பிறகு விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழ்நிலையைஅரசு ஏன் உருவாக்கவில்லை? இதை விளக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com