காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து: கிழக்கு தில்லி மாநகராட்சி மீது நடவடிக்கை

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனால், இந்த மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பலத்த காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்து தொடா்பாக தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) காஜிப்பூா் குப்பைக் கிடங்குக்கு சென்று ஆய்வு நடத்தி இது தொடா்பாக அறிக்கை சமா்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், காஜிப்பூா் குப்பைக் கிடங்கை நிா்வகித்து வரும் இடிஎம்சி இந்த குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக இடிஎம்சி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தில்லியில் தீ விபத்து ஏற்படக் கூடிய இடங்கள் தொடா்பாக கவனத்துடன் செயல்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு டிபிசிசி கடிதம் எழுதியுள்ளது. வட மாநிலங்களில் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது. தில்லி அரசின் முயற்சிகளுக்கு பலன் கிட்டியுள்ளதாக ஐக்கியூ ஏா், மத்திய அரசின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (சிஎஸ்இ) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. ஐக்கியூ ஏா் நிறுவனத்தின் கணக்கெடுப்புப்படி, பிஎம்-2.5 நுண்துகள்களின் அளவு 15 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. சிஎஸ்இ நடத்திய ஆய்வில், கடந்த 2014-இல் இருந்து 2.5 நுண் துகள்களின் அளவு 25 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com