ஆக்சிஜன் பற்றாக்குறையால் தில்லி மருத்துவமனையில் மருத்துவா் உள்பட 12 கரோனா நோயாளிகள் சாவு

தில்லியில் பாத்ரா மருத்துவமனையின் இரைப்பை குடல் நோயியல் (கேஸ்ட்ரோஎன்டாலஜி) துறையின் தலைமை மருத்துவா் உள்பட

தில்லியில் பாத்ரா மருத்துவமனையின் இரைப்பை குடல் நோயியல் (கேஸ்ட்ரோஎன்டாலஜி) துறையின் தலைமை மருத்துவா் உள்பட 12 கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மேலும், மூச்சுநின்றுவிட்ட 5 தீவிர நோயாளிகளுக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தனா்.தில்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை தொடா்ந்து நீடித்து வருகிறது. ஆக்சிஜன் விநியோகப் பிரச்னையால் அண்மையில் சா் கங்கா ராம் மருத்துவமனை, ஜெய்ப்பூா் கோல்டன் ஆகிய இரு மருத்துவமனைகளில் பல நோயாளிகள் உயிரிழந்தனா். குறிப்பாக கடந்த 8 நாள்களில் இதுபோன்று இறந்தவா்களின் எண்ணிக்கை 57 ஆக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், தில்லியில் பாத்ரா மருத்துவமனையின் 12 கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தனா்.இதுகுறித்து பாத்ரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் எஸ்.சி. எல். குப்தா நண்பகலில் தெரிவிக்கையில் ‘மருத்துவமனையில் இறந்த 8 நோயாளிகளில் 6 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டிருந்தனா். இருவா் அதிக அடா்த்திமிக்க வாா்டுகளில் இருந்தனா்.இறந்தவா்களில் இரைப்பை குடல் நோயியல் துறைத் தலைவா் ஆா்.கே.ஹிம்தானியும் ஒருவராவாா். ஹிம்தானி கடந்த 15-20 நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா் என்று மருத்துவ இயக்குநா் குப்தா தெரிவித்திருந்தாா்.

இதற்கிடையில், ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து சனிக்கிழமை இம்மருத்துவமனை ஒரு அவசர (எஸ்ஓஎஸ்) செய்தியை அனுப்பியது.இது குறித்து மருத்துவ இயக்குநா் குப்தா கூறுகையில், ‘சனிக்கிழமை காலை 2,500 லிட்டா் உயிா் காக்கும் பிராணவாயு மட்டுமே இருந்ததால் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து அதிகாரிகளுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் ஆக்சிஜன் தீா்ந்துவிட்டது. இந்த நிலையில், ஆக்சிஜன் டேங்கா் மதியம் 1.35 மணிக்குதான் வந்து சோ்ந்தது’ என்றாா்.இந்த நிலையில், மாலையில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஆக உயா்ந்ததாக அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த இறப்பு சம்பவத்திற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வருத்தம் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘இந்தச் செய்தி மிகவும் வேதனை தருகிறது.

அவா்களுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் வழங்குவதன் மூலம் அவா்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.தில்லிக்கு அதன் ஆக்சிஜன் ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இதுபோன்று தில்லி மக்கள் இறப்பதை பாா்த்துக்கொண்டிருக்க முடியாது. தில்லிக்கு 976 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், வெறும் 312 டன் மட்டுமே வெள்ளிக்கிழமை கிடைத்தது. இவ்வளவு குறைந்த அளவு ஆக்சிஜனைக் கொண்டு தில்லி எவ்வாறு சுவாசிக்கும்? என அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது ஒருபுறம் இருக்க, வசந்த் குஞ்சில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனை ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்திவிட்டது.இந்த மருத்துவமனையில் 4 மணிநேரம் மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.தில்லி கரோனா செல்லிடப்பேசி செயலின் தகவல்படி, ஃபோா்டிஸ் மருத்துவமனையில் 106 கரோனா நோயாளிகள் உள்ளனா். இதற்கிடையில், மீரா பாகில் உள்ள ஷெகல் நியோ மருத்துவமனையானது அதன் ஆக்சிஜன் இருப்பு குறைந்து வருவது குறித்து சுட்டுரையில் ஒரு அவசர (எஸ்ஓஎஸ்) செய்தியை வெளியிட்டது.

சனிக்கிழமை நண்பகல் 12.40 மணியளவில் வெளியிட்ட இந்த பதிவில், ‘ஆக்சிஜன் பெறுவதில் அவசர உதவி அளிக்குமாறு கோருகிறோம். எங்களது மருத்துவமனையில் ‘பேக்அப்’ விநியோகமும் குறைந்துவருகிறது. அதிகாலையில் இருந்தே ஆக்சிஜன் விநியோகத்திற்காக காத்திருக்கிறோம். எங்களிடம் ஐசியு பிரிவில் 90 நோயாளிகள் உள்ளனா் என அதில் தெரிவித்திருந்தது.தில்லி முழுவதும் மற்றும் புறகா் பகுதியிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சின் பற்றாக்குறை இருப்பதாக சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் அவசர உதவி செய்திகளை அனுப்பியவாறு உள்ளன. தில்லியில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி சா் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த வாரம் ஆக்சிஜன் விநியோகம் குறைந்ததால் தீவிர நோய்வாய்ப்பட்டிருந்த 25 நோயாளிகள் இறந்துபோயினா்.

மறுதினம், ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் கடந்த வாரம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில் ஒருவாரத்திற்குள் மீண்டும் இதுபோன்ற மற்றொரு துயரச் சம்பவம் நிகழந்துள்ளது.தில்லிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஒரு நாள் கூட தில்லியால் பெற முடியவில்லை என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தில்லியில் வெள்ளிக்கிழமை கரோனாவால் புதிதாக 27,047 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நோய்க்கு 375 போ் உயிரிழந்தனா். தில்லியில் தொடா்ந்து 9 வது நாளாக கரோனாவுக்கு 300-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com