வெளிநாடுகள் அனுப்பிய கரோனாவுக்கான மருத்துவ உபகரணங்கள் தில்லி வந்தன

அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகள் அனுப்பிய கரோனாவு தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் வெள்ளிக்கிழமை

அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகள் அனுப்பிய கரோனாவு தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் வெள்ளிக்கிழமை தில்லி வந்தடைந்தன. இவற்றுக்கு விரைவான சுங்க அனுமதிக்கான வசதி செய்யப்பட்டதாக நிதியமைச்சகம் தெரிவித்தது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது அலை கரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகள் உதவ முன் வந்துள்ளன. இதைத் தொடா்ந்து, அவசரத் தேவைக்கான தனது முதல் சரக்குகளை தனது விமானப்படை விமானம் மூலம் அமெரிக்கா வெள்ளிக்கிழமை அதிகாலை கொண்டு வந்தது. மேலும், ருமேனியா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து போன்ற நாடுகளும் சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பிய மருத்துவ சாதனங்கள் தில்லி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தன. இந்த நாடுகள் கொண்டு வந்த கரோனா மருத்துவ சாதனங்களை ஏா் காா்கோவும் தில்லி சுங்கத் துறையும் விரைவான அனுமதிகள் வழங்கி வருவதாக நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள மறைமுக வரி வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நாடுகள் கொண்டுவந்த மருத்துவ சாதனங்களின் விவரங்களையும் இந்த வரி வாரியம் பட்டியலிட்டுள்ளது.

அமெரிக்கா விமானத்தில்... : 200 - டி உருவளவு ஆக்சிஜன் சிலிண்டா்கள், 223 ஹெச் உருவளவு ஆக்சிஜன் சிலிண்டா்கள். இந்த சிலிண்டா்களுக்கு தேவையான ரெகுலேட்டா்கள். 210 - பிளஸ் ஆக்சிமீட்டா்கள், 1,84,000 கரோனா தொற்று பரிசோதனைக் கருவிகள், 84,000 என்-95 முகக்கவசங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. 157 செயற்கை சுவாசக் கருவிகள், 480 பிஐபிஏபி சுவாசக்கருவிகள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பியுள்ளது. இதேபோன்றுருமேனியா, 80 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள், 75 ஆக்சிஜன் கருவிகள் உள்ளிட்ட பொருள்களை அனுப்பித் தந்துள்ளது. இங்கிலாந்திலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டல் உள்ளிட்டவை வந்துள்ளதாக இந்த வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை 20 டன்கள் கொண்ட மருத்துவ சாதனங்களில் ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள், செயற்கை சுவாசக்கருவிகள் உள்ளிட்டவற்றை ரஷியா அனுப்பியிருந்தது.

மேலும், பிரான்ஸ், ஜொ்மனி, ஆஸ்திரேலியா, அயா்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன், நியூஸ்லாந்து உள்ளிட்ட 12 நாடுகள் மருத்துவப் பொருள்களை அனுப்புவதாக வெளியுறவுத் துறை செய்தி தொடா்பாளா் தெரிவித்தாா். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது சுட்டுரையில், மருத்துவ உதவிகளை வழங்கியுள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com