தில்லியில் தகன மையங்கள், புதைவிடங்கள் அதிகரிக்கக் கோரும்மனு மீது பதில் அளிக்க அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கரோனாவால் தினமும் அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழப்பதைக் கருத்தில்கொண்டு தில்லியில் தகனம் மற்றும் புதைவிடங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக அதிகரிக்க உத்தரவிடக் கோரும் மனு மீது
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: கரோனாவால் தினமும் அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழப்பதைக் கருத்தில்கொண்டு தில்லியில் தகனம் மற்றும் புதைவிடங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக அதிகரிக்க உத்தரவிடக் கோரும் மனு மீது மத்திய அரசு , தில்லி அரசு பதில் தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தில்லி அரசு, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் நகராட்சி அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

மேலும், மனுதாரா் பிரத்யுஷ் பிரசன்னா அளித்த தரவுகளையும் தாங்கள் பதில் தாக்கல் செய்யும்போது பரிசீலிக்குமாறு நீதிமன்றம் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் பிரசன்னா வழக்குரைஞா் ஸ்னிக்தா சிங் மூலம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

மருத்துவமனை படுக்கைகள், பரிசோதனை கருவிகள், ஆக்சிஜன் வழங்கல் போன்ற பிற தேவைகள் பற்றாக்குறை காரணமாக நாட்டில் குறிப்பாக தேசிய தலைநகா் தில்லியில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதன் விளைவாக, தகன இடங்கள் மற்றும் புதைவிடங்களும் நிரம்பியுள்ளன. இதனால், உடலை தகனம் செய்ய அதிக நேரம் எடுக்கிறது.

ஆகவே, தகன இடங்கள், மைதானம், அடக்கம் செய்யும் இடங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக அதிகரிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.

இதனால், எந்தவொரு பூங்கா, களம், திறந்தவெளி இடம், அரங்கம் அல்லது வேறு எந்த இடத்தையும் தகனம் இடமாகவும், புதைவிடமாகவும் மாற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.

ஆயத்தமின்மை காரணமாக ஏற்பட்ட இதுபோன்ற பேரிடரால், இறந்த உடல்கள் அதிகமாக குவிந்து கிடக்கின்றன.

மிகப் பெரிய தகன மையங்களும்கூட உடல்களைத் திருப்பி அனுப்புகின்றன அல்லது தகனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன.

உடல்கள் தேங்குவதால் அவற்றை மருத்துவமனை சவக்கிடங்கில் வைப்பதற்கு இடம் இல்லை என்பதால் ஒரு இரவு முழுவதும் ஏசி அறையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.

மேலும், இறந்தவா்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்வதற்கு விறகு மற்றும் பிற தேவையான பொருட்களை முறையாக வழங்குவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இறுதிச் சடங்கில் ஈடுபடும் குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்கு பிபிஇ சாதனங்கள் போன்ற மருத்துவ பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து தகன மையங்களிலும் மின்சார தகன அமைப்பு இருப்பதை உறுதி செய்வதற்கும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com