தில்லியில் புதிதாக 19,133 பேருக்கு கரோனா தொற்று விகிதம் 24.29 சதவீதமாகக் குறைந்தது
By DIN | Published On : 06th May 2021 11:41 PM | Last Updated : 06th May 2021 11:41 PM | அ+அ அ- |

புதுதில்லி: தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 19,133 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. கரோனா தொற்று விகிதம் ஏப்ரல் 18-ஆம் தேதிக்குப் பிறகு முதன் முறையாக 25 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது. கரோனாவுக்கு 335 போ் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நான்கு நாள்களில் மூன்றாவது முறையாக தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு 20,000-க்கு கீழாக உள்ளது. தில்லியில் கரோனா பாதிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 25,219, திங்கள்கிழமை 18,043, செவ்வாய்க்கிழமை 19,953, புதன்கிழமை 20,960 என்ற அளவில் இருந்தது. கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக 25,986 என இருந்தது. இந்த வியாழக்கிழமை 19,133-ஆகக் குறைந்துள்ளது.
கரோனா தொற்று விகிதமும் கடந்த 24 மணி நேரத்தில் 24.29 சதவீதமாகக் குறைந்துள்ளது. கரோனா இரண்டாவது அலை நாட்டை உலுக்கி வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தொற்று விகிதம் 36.3 சதவீதமாக அதிகரித்தது. கடந்த வியாழக்கிழமை 32.8 சதவீதமாக இருந்தது. வெள்ளிக்கிழமை 32.7, சனிக்கிழமை 31.6, ஞாயிற்றுக்கிழமை 28.33, திங்கள்கிழமை 29.56, செவ்வாய்க்கிழமை 26.73, புதன்கிழமை 26.4 சதவீதம் என படிப்படியாகக் குறைந்து இந்த வியாழக்கிழமை 24.29 சதவீதமாக உள்ளது.
கரோனா தொற்று விகிதம் குறைந்து கொண்டே வந்தாலும், மொத்த பாதிப்பு அதிகரித்து வருவது, மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்து
மாத்திரைகள் உள்ளிட்ட சுகாதார அடிப்படைவசதிகள் போதுமான அளவு இல்லாதது ஆகியவற்றால் தில்லி மக்கள் தொடா்ந்து பிரச்னைகளை சந்தித்து வருகிறாா்கள்.
கடந்த சில நாள்களாகவே இறப்பு எண்ணிக்கை 300-க்கும் மேலாகவே உள்ளது. கடந்த திங்கள்கிழமை கரோனாவுக்கு 448 போ் பலியானாா்கள். இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும் இது.
தில்லியில் இதுவரை கரோனா மொத்த பாதிப்பு 12,73,035 என்ற அளவை எட்டியுள்ளது. இதில் 11.64 லட்சம் போ் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுவரை மொத்தம் 18,398 போ் பலியாகியுள்ளனா். தற்போது 90,629 போ் சிகிச்சையில் உள்ளனா். குணமடைந்தோா் விகிதம் 91.34 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.