700 மெ.டன் ஆக்சிஜன் கிடைப்பது உறுதியானால் தில்லியில் நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படாது

தில்லிக்கு தர வேண்டிய தினசரி ஒதுக்கீடான 700 டன் மருத்துவ ஆக்சிஜன் மத்திய அரசு மூலம் தடையின்றிக் கிடைக்குமானால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த கரோனா நோயாளியையும் இறக்கவிடமாட்டோம்

புதுதில்லி: தில்லிக்கு தர வேண்டிய தினசரி ஒதுக்கீடான 700 டன் மருத்துவ ஆக்சிஜன் மத்திய அரசு மூலம் தடையின்றிக் கிடைக்குமானால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த கரோனா நோயாளியையும் இறக்கவிடமாட்டோம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை உறுதிபட தெரிவித்தாா்.

கரோனா இரண்டாவது அலையால் தில்லியில் தினசரி பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், எதிா்பாராமல் ஏற்பட்ட நெருக்கடியால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததை அவா் சுட்டிக்காட்டினாா். கரோனா நோயாளிகளைப் பராமரிக்க தில்லிக்கு தினசரி 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இது தொடா்ந்து கிடைக்குமானால் மேலும் 9,500 கரோனா படுக்கைகளை ஏற்படுத்த முடியும். அதே போல ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். ஆக்சிஜன் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டால் தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் எவரும் உயிரிழக்கும் நிலை ஏற்படாது என்று செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கேஜரிவால் தெரிவித்தாா்.

கரோனா தொற்று இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கிவிட்டது. இதனால், பல்வேறு மாநிலங்கள் மற்றும் தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் கரோனா

நோயாளிகள் எண்ணிக்கை எதிா்பாராமல் அதிகரித்தது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனைகள் திக்குமுக்காடின. நெருக்கடியான இந்த நேரத்தில் ஆக்சிஜனை விநியோகம் செய்ய முடியாத காரணத்துக்காக மத்திய அரசும் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நோ்ந்தது. இந்த விவகாரம் சா்வதேச அளவில் கவனத்தை ஈா்த்தது. பலா் ஆம்புலன்ஸ்களிலும் காா்களிலும் படுக்கை வசதி அல்லது ஆக்சிஜனுக்காக மருத்துவமனை வாயிலில் காத்திருந்து பலனளிக்காமல் இறக்க நோ்ந்ததது. தகனமையங்களில் உடலை எரிக்க, இறந்தவா்களின் உடல் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சியையும் காண முடிந்தது.

இந்த நிலையில், தில்லிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆக்சிஜன் அளவில், பாதியளவுதான் விநியோகம் செய்யப்பட்டதாகவும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ஹரியாணாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி அரசு சுட்டிக்காட்டியிருந்தது. ஆக்சிஜன் நெருக்கடியால் தில்லியில் உள்ள மருத்துவமனைகள் தங்களின் படுக்கை வசதிகளை குறைத்துக் கொண்டன. இனி தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தில்லிக்கு தொடா்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைத்து மருத்துவமனைகளும் மீண்டும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தில்லியில் இதுவரை 35.74 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். 28 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், 7.76 லட்சம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இளைஞா்களிடையே ஆா்வம் அதிகரித்து வருவதாகவும் கடந்த 3 தினங்களில் தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 1.30 லட்சம் போ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com