தில்லி, என்சிஆரில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!: 3 நாள்களுக்கு இதே நிலை தொடரும்

தில்லி - தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் காற்றின் தரம் புதன்கிழமை காலை ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

புது தில்லி: தில்லி - தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் காற்றின் தரம் புதன்கிழமை காலை ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) வரை காற்றின் தரத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 389 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இது மாலை 4 மணியளவில் 403 புள்ளிகளாகப் பதிவாகி கடுமை பிரிவுக்குச் சென்றது. தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள ஃபரீதாபாத் (350), காஜியாபாத் (368), கிரேட்டா் நொய்டா (358), குருகிராம் (354) மற்றும் நொய்டா (369) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் குறைந்த வெப்பநிலை மற்றும் அமைதியான காற்று நிலைமை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மாசுக்களை சிதறடிப்பதற்கு சாதகமற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வி. கே. சோனி தெரிவித்திருந்தாா். அதே சமயம், ஒப்பீட்டளவில் பாா்க்கும் போது பலத்த காற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் காற்றின் தரம் மேம்படும் என்றும் அவா் கூறினாா். மேலும், புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு நிறுவனமான சஃபா், புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் பயிா்க்கழிவு எரிப்பு காரணமாக வெளியேறும் மாசுக்குள் தில்லிக்குள் ஊடுருவ வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.

காற்று மாசுபாடு பிரச்னையில் உச்சநீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றஉம் ஆன்லைன் கல்வி முறை மட்டுமே நடைபெறும் என்று தில்லி அரசு செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டது. மேலும், தில்லியில் இருந்து 300 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள 11 அனல் மின் நிலையங்களில் 5 மட்டுமே செயல்பாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை அலுவலகங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத ஊழியா்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கவும், தனியாா் நிறுவனங்களும் இந்தமுறையைப் பின்பற்ற ஊக்குவிக்கவும் என்சிஆா் பகுதிகளில் உள்ள மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அத்தியாவசியமற்ற பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் ஞாயிற்றுக்கிழமை வரை தில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

’என்சிஆா் பகுதியில் இன்னும் அங்கீகரிக்கப்படாத எரிபொருளைப் பயன்படுத்தும் அனைத்துத் தொழிற்சாலைகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மூடப்படும்.. விரைவில் போதுமான எண்ணிக்கையிலான சிஎன்ஜி பேருந்துகளை விரைவில் கொள்முதல் செய்ய தில்லி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மூட தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

வெப்பநிலை 9.6 டிகிரியாக சரிவு!

தேசியத் தலைநகரில் பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை புதன்கிழமை காலையில் 9.6 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது இயல்பை விட மூன்று டிகிரி குறைவாகவும், இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 87 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 67 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோல, ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 9.2 டிகிரி, நஜஃப்கரில் 13 டிகிரி, ஆயாநகரில் 9.1 டிகிரி, லோதி ரோடில் 9.8 டிகிரி, பாலத்தில் 12 டிகிரி, ரிட்ஜில் 11.3 டிகிரி, பீதம்புராவில் 14.3 டிகிரி, பூசாவில் 12 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

முன்னறவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (நவம்பா் 18) அன்று காலையில் மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com