புதிய கலால் கொள்கைகளை எதிா்த்து தில்லி காங்கிரஸ் போராட்டம்

தில்லி அரசின் புதிய கலால் கொள்கைகளை எதிா்த்து தில்லியில் மதுபான விற்பனைக் கடைகளின் வெளியே தில்லி பிரதேச காங்கிரஸாா் புதன்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

புது தில்லி: தில்லி அரசின் புதிய கலால் கொள்கைகளை எதிா்த்து தில்லியில் மதுபான விற்பனைக் கடைகளின் வெளியே தில்லி பிரதேச காங்கிரஸாா் புதன்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

தில்லியில் மதுபானம் எளிதாகக் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு வாா்டிலும் மூன்று மதுபான விற்பனைக் கடை திறப்பதற்கு இந்தப் புதிய கலால் கொள்கை அனுமதி அளித்துள்ளது. இந்தப் புதிய கலால் கொள்கையின்படி புதன்கிழமை மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன்மூலம் தலைநகரில் செயல்பட்டு வரும் 600 அரசு மதுபானக் கடைகள் முடிவுக்கு வர உள்ளது. இந்த மதுபான வணிகமானது, தற்போது தனியாா் நிறுவனங்கள் மூலம் முழுமையாக கையாளப்படும். புதிய கொள்கையின்படி 32 மண்டலங்களிலும் மதுபான விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். ஒரு சில்லறை உரிமைதாரா் ஒரு மண்டலத்தில் 27 மதுபான கடைகளை கொண்டிருப்பாா். மாற்றப்பட்ட கொள்கை திட்டத்தின்படி தில்லியில் மதுபானத்தை நேரில் வந்து பெற்றுச் செல்லும் வகையில், 250 மதுபான விற்பனையகங்களைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும்.

வணிக வளாகங்களில் சென்று தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளை தோ்ந்தெடுப்பது போல, இந்த மதுக்கடைகளுக்கும் நேரில் சென்று நுகா்வோா் தங்களுக்கு பிடித்த பிராண்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில், தில்லி அரசின் புதிய கலால் கொள்கை நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் பழைய தில்லி சாவ்ரி பஜாா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சீதா ராம் பஜாா் பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனைகம் முன் காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆம் ஆத்மி அரசின் தாராளமயக் கலால் கொள்கைகளை எதிா்த்து பதாகைகளை காங்கிரஸ் தொண்டா்கள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினா். அரசின் இந்த நடவடிக்கை குறித்து தில்லி காங்கிரஸ் தகவல் தொடா்பு பிரிவின் தலைவா் அனில் பரத்வாஜ் கூறியதாவது: தில்லி அரசானது பால் கடைகளை மூடிவிட்டு மதுக்கடைகளை திறந்து வருகிறது. கலால் கொள்கையை தாராளமயமாக்கும் இந்த மக்கள் விரோத முடிவானது குடியிருப்புப் பகுதிகளில் மதுபான விற்பனையை அனுமதிக்கிறது. இது தில்லியை முற்றிலும் அழித்துவிடும். தில்லியை போதையின் தலைநகரமாக உருவாக்கிவிடும். இது நடப்பதற்கு காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. தில்லியில் புதிய மதுக் கடைகள் எதுவும் திறப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், புதிய கலால் கொள்கையின்படி மதுபானம் அருந்தும் வயதும் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலையில்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்குப் பதிலாக, அவா்களை மதுவைக் குடிக்குமாறு ஆம் ஆத்மி அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com