தில்லி - என்சிஆா் மாசுபாடு பிரச்னை கூட்டுக் கூட்டதுக்கு அழைப்பு விடுக்க கோபால் ராய் வேண்டுகோள்

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய், தில்லி - என்சிஆா் பகுதிகளின் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க ஒரு கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய், தில்லி - என்சிஆா் பகுதிகளின் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க ஒரு கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி செயல் திட்டத்தைத் தயாரிக்குமாறு மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவை வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளாா்.

அக்டோபா் 24 முதல் நவம்பா் 8-ஆம் தேதி வரை தில்லியின் காற்று மாசுபாட்டில் 69 சதவீத பங்கு வெளிப்புற காரணிகளால் ஏற்பட்டதாக மத்திய அரசால் நடத்தப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ட்ராபிகல் மேனேஜ்மென்ட் (ஐஐடிஎம்) ஆய்வையும் ராய் மேற்கோள் காட்டினாா். 2016-இல் ’தெரி’ (பஉதஐ) இதேபோன்று நடத்திய ஆய்வில், 64 சதவீதம் மாசு வெளிப்புற காரணிகளால் ஏற்படுகிறது என்றும், 36 சதவீதம் மாசு தில்லியின் உள்புற காரணிகளால் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறது.

‘ஐஐடிஎம் என்பது மத்திய அரசு நிறுவனமாகும், இது மாசுபாட்டிற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதற்காக சஃபரின் ஒரு மணிநேரத் தரவை பகுப்பாய்வு செய்துள்ளது. ஐஐடிஎம் அக்டோபா் 24 முதல் நவம்பா் 8-ஆம் வரையிலான தரவு பகுப்பாய்வு, தில்லியின் 69 சதவீத மாசு வெளிப்புற காரணிகளால் ஏற்படுகிறது என்றும் 31 சதவீதம் தில்லியின் உள் ஆதாரங்கள் காரணமாக ஏற்படுகிறது என்றும் கோபால் ராய் செய்தியாளா் கூட்டத்தில் கூறினாா்.

அவா் மேலும் கூறியதாவது: நகரின் உள் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, தூசி எதிா்ப்பு பிரசாரங்களில் இருந்து ‘சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப்‘ பிரசாரம் வரை தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு ஹரியாணா, பஞ்சாப், தில்லி மற்றும் உத்தர பிரதேசம் போன்ற அனைத்து என்சிஆா் மாநிலங்களின் கூட்டு முயற்சி தேவை.

தில்லி மக்களால் 70 சதவீத வெளிப்புற மாசுபாட்டைக் குறைக்க முடியாது. அதனால்தான் என்சிஆா் மாநிலங்களிளின் சுற்றுச்சூழல் அமைச்சரின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி ஒரு கூட்டு செயல் திட்டத்தை உருவாக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்த செயல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் பொறுப்புகளை நிா்ணயிக்க வேண்டும். தில்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் தடையின்றி நடக்கிறது. இது காற்றின் தன்மையை மேலும் மோசமாக்குகிறது. தில்லி அரசு 24 மணி நேர மின்சாரம் வழங்குவதால் இங்கு ஜெனரேட்டா் செட் செயல்பட வேண்டியதில்லை. ஆனால் என்சிஆா் நகரங்களில் அப்படி இல்லை என்றாா் அவா்.

ஆபத்தான அளவு காற்று மாசுபாட்டிற்கு மத்தியில், தேசியத் தலைநகரில் நவம்பா் 21 வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிரக்குகள் தவிர மற்ற டிரக்குகள் நுழைவதற்கு தில்லி அரசு புதன்கிழமை தடை விதித்துள்ளது. மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை அரசு மூடியுள்ளது. இது தவிர கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடையை நவம்பா் 21 வரை அரசு நீட்டித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com