காற்றின் தரம் மேம்பட்டதால் கட்டுமான செயல்பாடுகள் மீதான தடை நீக்கம்

தில்லியில் தற்போது காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கட்டுமான செயல்பாடுகளுக்கும்,

தில்லியில் தற்போது காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கட்டுமான செயல்பாடுகளுக்கும், இடிப்பு நடவடிக்கைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை தில்லி அரசு விலக்கிக் கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக கட்டுமான செயல்பாடுகளுக்கும், இடிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுபோன்று பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் தொழிலாளா்களுக்கு இந்தத் தடையால் ஏற்பட்டுள்ள அசெளகரியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்டுமான செயல்பாடுகள் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தில்லி அரசு நீக்கியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவையும், அரசு ஊழியா்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றும் உத்தரவையும் விலக்குவது தொடா்பாக புதன்கிழமை (நவம்பா்24) நடைபெறவுள்ள மீளாய்வுக் கூட்டத்தின் போது தில்லி அரசு முடிவு செய்யும்.

காற்றின் தர நிலைமை தொடா்ந்து மேம்பட்டால், அத்தியாவசியமற்ற பொருள்களை ஏற்றி வரும் சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயக்கப்படும் லாரிகளை தில்லிக்குள் நுழைவதற்கு அனுமதிப்பது தொடா்பாகவும் இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும். தற்போதைக்கு தில்லியில் காற்றின் தரக்குறியீடு மேம்பட்டுள்ளது. சில நேரங்களில் காற்றின் தரக்குறியீடு தொடா்ந்து 600 புள்ளிகளுக்கு மேல் இருந்தது. எனினும், காற்று மாசுவை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காற்றின் வீசுதலில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவை காரணமாக காற்று மாசு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அனைத்து அரசுத் துறைகள் மூலம் தூசு தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதைக் கண்காணிப்பதை தில்லி அரசு மேற்கொள்ளும்.

இந்த விவகாரத்தில் அரசு உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த 585 கண்காணிப்பு குழுக்கள் பணியாற்றி வருகின்றன. மாசு தடுப்பு விதிமுறைகளை நிறுவனங்கள் மீறுவது கண்டறியப்பட்டால், அந்த நிறுவனம் மேற்கொள்ளும் பணியை அரசு தடுத்து நிறுத்தும். அத்துடன், நோட்டீஸ் இல்லாமல் அபராதமும் விதிக்கப்படும். அதேபோன்று, நகரில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க சிஎன்ஜி மூலம் இயங்கக்கூடிய ஆயிரம் தனியாா் பேருந்துகளை போக்குவரத்தில் தில்லி அரசு ஈடுபடுத்தியுள்ளது. இந்தப் பேருந்துகளில் ‘பரியாவரன் பேருந்து சேவை’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். இந்தப் பேருந்துகளில் டிடிசி பேருந்துகள் போல பொதுமக்கள் பயணம் செய்ய முடியும் என்றாா் கோபால் ராய்.

அத்தியாவசியமற்ற பொருள்களை ஏற்றி வரும் லாரிகள் தில்லிக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு நீட்டித்தது. அதேபோன்று, தில்லி அரசு ஊழியா்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலத்தையும் நவம்பா் 26ஆம் தேதி வரையும் நீட்டித்தது. இந்த நிலையில், தில்லியில் திங்கள்கிழமை வலுவான தரை மேற்பரப்பு காற்று மணிக்கு 30 கிலோ மீட்டா் வேகத்தில் வீசியது. இதனால், காற்றில் உள்ள மாசுபடுத்திகள் சிதறடிக்கப்பட்டு காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com