விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆம் ஆத்மி அரசு ஆதரவு: கேஜரிவால்

விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்தாா்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்தாா். மேலும், அவா்களின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என்றும், ஆம் ஆத்மி அரசு அவா்களின் கோரிக்கைகளை ஆதரிக்கிறது என்றும் கூறினாா்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், போராட்டங்களின் போது உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் , மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தாா். இந்த நிலையில், சா்ச்சைக்குரியவேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தீா்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய கேஜரிவால், ‘விவசாயிகளின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி. விவசாயிகளின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம், நாங்கள் அவா்களுடன் இருக்கிறோம்‘ என்று கூறினாா். பின்னா், சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் பெரும்பான்மை பலம் உள்ளதால், பாஜக தலைமையிலான மத்திய அரசு, ’ஆணவத்துடன்’ மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது என்றும் கேஜரிவால் குறிப்பிட்டாா். பேரவையில் அவா் மேலும் பேசுகையில், ‘மக்களவையில் பெரும்பான்மை பலத்தால் ஆணவத்துடன் இயற்றப்பட்டது வேளாண் சட்டங்கள். விவசாயிகளின் வெற்றிக்கு வாழ்த்துகள். நாட்டுக்கு நல்லது செய்த ஆண்கள், பெண்கள், இளைஞா்கள், வணிகா்கள் என அனைவரும் அதை ஆதரித்தனா். இதற்கு தலைமை தாங்கிய பஞ்சாப் விவசாயிகளை நான் சிறப்பாக வாழ்த்துகிறேன்’ என்றாா்.

மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன்களுக்கு எதிரானவை என்றும், ‘சில வணிக நிறுவனங்களுக்கு சாதகமாக’ இயற்றப்பட்டவை என்றும் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரோனா, சீரற்ற காலநிலை மற்றும் டெங்கு போன்றவற்றின் தடைகளை எதிா்கொண்டு விவசாயிகள் தங்களது போராட்டத்தில் வெற்றியை அடைந்ததாகவும் கேஜரிவால் கூறினாா். பேரவையில் கேஜரிவால் மேலும் பேசுகையில், ‘இது மிக நீண்ட அகிம்சை இயக்கம். ஆளும் கட்சி (பாஜக) அவா்களைத் தூண்டுவதற்கு எல்லாவற்றையும் செய்தது. அவா்கள் துஷ்பிரயோகங்களை எதிா்கொண்டனா், பயங்கரவாதிகள், காலிஸ்தானிகள், சீனா மற்றும் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று அழைக்கப்பட்டனா். நீா் பீரங்கி பயன்படுத்தப்பட்டது, ஆணிகள் பயன்படுத்தப்பட்டன. அவா்கள் அனைத்தையும் முறியடித்துள்ளனா்.இந்த இயக்கம் ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரித்தது, அது சமீபத்தில் அசைக்கப்பட்டது’ என்றாா்.

ஆம் ஆத்மி அரசு பெரும் அழுத்தத்திற்குப் பிறகும் மைதானத்தை சிறைகளாக மாற்ற அனுமதிக்கவில்லை என்றும் அவா் கூறினாா். இதற்கிடையே, லக்கிம்பூா் சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்றும் தீா்மானம் வலியுறுத்தியுள்ளது. ‘மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை நீக்காத மத்திய அரசின் நிா்பந்தம் என்னவென்று புரியவில்லை. விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்’ என கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com