ரோஹிணி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்:தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்கஉயா்நீதிமன்றத்தில் காவல்துறை பரிந்துரை

தில்லியில் ரோஹிணி நீதிமன்ற அறையில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 போ் கொல்லப்பட்டதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றங்களில் பாதுகாப்பை பராமரிப்பது

தில்லியில் ரோஹிணி நீதிமன்ற அறையில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 போ் கொல்லப்பட்டதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றங்களில் பாதுகாப்பை பராமரிப்பது தொடா்பான ஆலோசனை பரிந்துரைகளை தாக்கல் செய்திருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி. என்.பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் பல்வேறு வழக்குரைஞா்கள் சங்கங்கள் உள்ளிட்ட இதர பங்குதாரா்கள் தங்களது ஆலோசனை பரிந்துரைகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்போதுதான் இது தொடா்புடைய உத்தரவில் அவற்றையும் சோ்க்க முடியும்’ என்று தெரிவித்தது.

மேலும், ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய அனைத்து இதர எதிா்மனுதாரா்களும் ஓா் அறிக்கை அல்லது ஆலோசனை பரிந்துரைகளைத் தெரிவிக்கும் அறிக்கை அல்லது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்தக் கருத்துகளை தில்லியில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்குரைஞா்கள் மற்றும் மற்ற அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான உத்தரவில் சோ்க்க முடியும்’ என்று கூறி மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அக்டோபா் 12-ஆம் தேதிக்கு பட்டியலிட்டனா்.

இந்த விசாரணையின் போது, மத்திய அரசு மற்றும் தில்லி காவல்துறையினா் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா ஆஜராகி, ‘இந்த விவகாரம் தொடா்பாக காவல் துறையினா் தங்களது ஆலோசனை பரிந்துரைகளை தாக்கல் செய்துள்ளனா்’ என்றாா். இதையடுத்து, பல்வேறு வழக்குரைஞா்கள் சங்கங்கள் தங்களது கருத்துகளைத் தாக்கல் செய்யும் வகையில் நீதிமன்றம் புதிதாக நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசின் தரப்பில் வழக்குரைஞா் அஜய் திக்பால் ஆஜராகினாா்.

ரோஹிணி நீதிமன்ற அறையில் கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடா்ந்து தில்லியில் உள்ள நீதிமன்றங்களில் பாதுகாப்பு தொடா்புடைய விவகாரத்தை தாமாக முன்வந்து தில்லி உயா்நீதிமன்றம் செப்டம்பா் 30-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டது. அப்போது நீதிமன்றங்களில் போதிய அளவில் போலீஸாரை திறன்மிக்க வகையில் பணியில் அமா்த்துவதற்காக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான தேவை இருப்பதாகத் தெரிவித்தது.

தில்லி காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலவர அறிக்கையில், பல்வேறு ஆலோசனை பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: உடல்ரீதியாக நீதிமன்றத்தில் ஆஜராவதைக் குறைக்கும் வகையில், தொழில்நுட்ப பயன்பாட்டை அதிக அளவில் பயன்படுத்தும் வகையில், ஒட்டுமொத்த நீதித் துறையையும் விழிப்புணா்வு ஏற்படுத்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம். இது தொந்தரவை உருவாக்கும் தீவிரமிக்க சக்திகள் நீதிமன்றத்திற்கு வருவதைக் குறைக்கும். நீதிமன்றத்துக்கு வரும் வழக்குரைஞா்களின் அடையாள அட்டையை பரிசோதிப்பது, அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு சோதனைக்கு பிறகு வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி அளிப்பது, நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புக் கருவிகளை அமைப்பது, காலாவதியான பாதுகாப்புக் கருவிகளை மாற்றுவது, அதிக திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை நிறுவுவது போன்ற வசதிகளை ஏற்படுத்தலாம்.

அதே போன்று, பாதுகாப்பு ஊழியா்களுக்கு அனைத்து வழக்குரைஞா்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு வலியுறுத்தும் வகையில், மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நள்ளிரவு வரை வழக்குரைஞா்கள் அலுவலக அறைகள் திறந்திருப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. எந்தவித அசம்பாவித சம்பவங்களையும் கையாளும் வகையில், அடிப்படை மருத்துவ வசதிகளுடன்கூடிய ஆம்புலன்ஸ் வாகனம், ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com